இடைத்தேர்தல் முடிவுகள் காங்., பாஜ தலா 2 தொகுதியில் வெற்றி: காஷ்மீரில் 2 தொகுதியிலும் தேசிய மாநாட்டு கட்சி தோல்வி
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் ஆளும் தேசிய மாநாடு கட்சி தோல்வியடைந்துள்ளது. காங்., பாஜ தலா 2 தொகுதியில் வெற்றி பெற்றன. ராஜஸ்தானின் ஆன்டா சட்டமன்ற தொகுதி, ஜார்க்கண்ட்டின் காட்ஷிலா, தெலங்கானாவின் ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாபின் டார்ன் டரன், ஒடிசாவின் நுபாடா. மிசோரமில் டம்பா சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் நக்ரோடா, பட்காம் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சியானது இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. நக்ரோடா தொகுதியில் பாஜவின் தேவயானி ராணா வெற்றி பெற்றார். பட்காமில் பிடிபி கட்சியின் ஆகா சையது வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் உமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பட்காம் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாடு கட்சி தோல்வியடைந்துள்ளது. 1957ம் ஆண்டு சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் நடைபெற்றதில் இருந்து முதல் முறையாக பட்காம் தொகுதியை தேசிய மாநாடு கட்சி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஒடிசாவின் நுபாடா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை பாஜ வேட்பாளர் தோற்கடித்துள்ளார். பஞ்சாபின் டார்ன் டரன் சட்டமன்ற தொகுதியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஜார்க்கண்டின் காட்ஷிலா சட்டமன்ற தொகுதியை ஜேஎம்எம் வேட்பாளர் கைப்பற்றி உள்ளார். மிசோரமின் டம்பா தொகுதியை மிசோ தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது.
