வண்ணத்துப்பூச்சிப் பூங்கா
வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு மகிழாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய பல வண்ணங்களில் இங்கும் அங்குமாகப் பறந்து வர்ணஜாலம் காட்டும் வண்ணத்துப்பூச்சிகளுக்காகவே தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்கா வெப்பமண்டல வண்ணத்துப் பூச்சிகளுக்கான காப்பகமாகும். வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் நோக்கிலும் இயற்கைச் சூழலில் ரூ.8 கோடி மதிப்பில், ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகத் தமிழக அரசால் 2014ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேலூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் 25 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6.கி.மீ தொலைவிலும், காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரியும் இடமான முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வண்ணத்துப்பூச்சிப் பூங்காவின் வடக்குப்புறத்தில் கொள்ளிடம் ஆறு தெற்குப்புறத்தில் காவிரி ஆறு ஓடுகின்றது. இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களைக் கொண்ட நட்சத்திர வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சுமார் 30 அடி உயரம் வளரக்கூடிய 9 அடி உயரம் கொண்ட 5000 மரச் செடிகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. இங்கு வண்ணத்துப்பூச்சி செயற்கைக் கல்மரம் பின்னணியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதிகள் கொண்ட இனப்பெருக்க மையம் உள்ளது. இங்கு வண்ணத்துப்பூச்சிகள் நவீனத் தொழில்நுட்ப முறையிலும் இயற்கை முறையிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்ற தாவரங்களும், பல்வேறு வகையான மலர்ச்செடிகள், குறுமரங்கள், குறுஞ்செடிகள், புற்கள் போன்றவையும், பல்வேறு விதமான மரங்களும் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணத்துப்பூச்சியின் மாதிரி உருவங்களும் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அரை ஏக்கர் பரப்பளவில் சிறுவர் படகுக்குளம் மற்றும் இரும்புத் தகடுகளால் வண்ணத்துப்பூச்சி வடிவில் செயற்கையாக செய்யப்பட்ட உருவம், கல்மரம், வண்டுகள், வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிவகைகள் செயற்கைக் கல்மரத்தில் மொய்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் விளையாடுவதற்கான தனிப்பூங்காவும் உள்ளது. இந்த பூங்காவுக்குப் பொழுது போக்குக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் சென்று பார்த்து அரிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கு ஏற்ற சுற்றுலாத்தலம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.