தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட பல காரணிகளால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், தனியார் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
2024 டிசம்பர் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்கு வரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரை உறுப்பினார்களாக கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. தனியார் பேருந்து உரிமையாளர்களின் கருத்தகளை அனுப்பச் சொன்ன நிலையில் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜஹான் ஆகியோர் ஆஜராகி இதுவரை 950 பரிந்துரைகள் வந்துள்ளதாக.” தெரிவித்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தி இறுதி உத்தரவு டிசம்பர் 30-ம் தேதிக்குள் பிறப்பிக்கப்படும்” என்று வழக்கறிஞர்கள் இருவரும் உறுதியளித்தனர்.அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்துவைத்ததுடன், அரசு எடுக்கும் இறுதி முடிவை 2026 ஜனவரி 6-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.