எரிந்த நிலையில் கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்கம் பற்றி ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி டெல்லியில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட நீதித்துறை உள்விசாரணையில், அந்தப் பணம் நீதிபதியின் மறைமுக அல்லது நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கண்டறியப்பட்டு, அவரைப் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதனிடையே, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகுவதாக நீதிபதி யஷ்வந்த வர்மா ராஜினாமா கடிதம் அளித்தார். இருப்பினும், சட்ட அமைச்சகம் அவரது ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியலில் அவரது பெயர் இன்னும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இந்த விவகாரம் தொடர்பான விதிகளை ஆய்வு செய்த பிறகும், இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்திய பிறகும் நாடாளுமன்றத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.


