ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய போரால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. அன்றாட வாழ்க்கை இயக்கம் நடந்தாலும், உலகின் இயக்கம் வேகமாக முடங்கி வருகிறது. ஏன் கொரோனா காலத்தை போல் முற்றிலும் முடங்கும் அபாயம் கூட உள்ளது. அதைத்தான் மேற்கு ஆசியா போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, கொரோனா தொற்றின் போது நாடு ஒன்றுபட்டு நின்றதைப் போலவே தயாராகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என மக்களவையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
மேற்கு ஆசியா போருக்கும், இந்தியாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்றாலும், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், காஸ் சப்ளைக்காக காத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இன்று பெரும் சிக்கல். எந்தவித முன்எச்சரிக்கை நடவடிக்கையையும் இதுவரை மோடி அரசு எடுத்ததே இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு கட்டி வைக்காவிட்டால் இன்று நம்மிடம் உள்ள 53 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோல் இருப்பு இருக்காது.
இப்போது தான் அதை 65 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக மோடி அரசு, எரிசக்தி துறையில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டது. அதனால் தான் இன்று வரை சமையல் காஸ் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. சிலிண்டர் பெற்று 25 நாள் கழித்து தான் முன்பதிவு செய்ய முடியும், அதன்பிறகு 25 நாள் கழித்து தான் சிலிண்டர் சப்ளைக்கான பில் வரும். கிட்டத்தட்ட ஒரு சிலிண்டர் பெற்று, அடுத்த சிலிண்டர் பெறுவதற்கு சுமார் 60 முதல் 70 நாட்கள் கடந்து விடுகிறது.
அப்படி இருக்கும் போது சிலிண்டர் சப்ளையை நம்பி உள்ள சமையல் அறைகளில் எப்படி அடுப்பு எரியும்? வர்த்தக காஸ் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள் முடங்கி விட்டன. இன்னும் இந்த போர் நீடித்தால் இந்தியாவே முடங்கி விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏன் ஏப்.29ம் தேதி மேற்குவங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் கொரோனா தொற்று காலகட்டத்தில் நாடு ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, இப்போதும் தயாராகவும் ஒற்றுமையாகவும் நாம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருக்கிறார். அதாவது கஷ்டத்தை மட்டும் மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மோடி நினைக்கிறார்.
2013ல் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை பேரல் 145 டாலரை எட்டிய போது ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.75 ஆகத்தான் இருந்தது. ஆனால் 2014ல் பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு கச்சா எண்ணெய் விலை 45 டாலருக்கு சரிந்த போதும் மக்கள் மீது வரிக்கு மேல் வரி விதித்து பெட்ரோல் விலையை இப்போது வரை ரூ.100க்கு மேல் வைத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.94ஐ எட்டியிருக்கிறது. நாட்டின் பிரதமராக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் எல்லாவற்றிக்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் மீது தான் சுமையை ஏற்ற மோடி தயாராக இருக்கிறார். அதுதான் இனி நடக்கப்போகிறது.


