Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பும்ரா பந்துகளில் பம்மிய லக்னோ: மும்பை இமாலய வெற்றி

மும்பை: மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 45வது லீக் போட்டி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன் களமிறங்கினர்.

துவக்கம் முதல் இவர்கள் அடித்து ஆடத் துவங்கினர். 2.5 ஓவரில் மும்பை 33 ரன்கள் குவித்திருந்த நிலையில், மயங்க் யாதவ் வீசிய பந்தை அடிக்க முயன்ற ரோகித் (12 ரன்), பிரின்ஸ் யாதவிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். பின்னர், வில் ஜாக்ஸ் களமிறங்கினார். பவர்பிளே முடிவில், மும்பை அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன் குவித்திருந்தது. அதன் பின்னர், திக்வேஷ் ரதி வீசிய 9வது ஓவரில், படோனியிடம் கேட்ச் தந்து ரிக்கெல்டன் (32 பந்து, 4 சிக்சர், 6 பவுண்டரி, 58 ரன்) அவுட்டானார். பின்னர், வில் ஜாக்சுடன், சூர்யகுமார் யாதவ் இணை சேர்ந்தார்.

இவர்கள் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்ததால் 9.4 ஓவரில் மும்பை அணி, 100 ரன்னை எட்டியது. இந்நிலையில், 12வது ஓவரை வீசிய பிரின்ஸ் யாதவ், வில் ஜாக்சை (29 ரன்) கிளீன் போல்டாக்கினார். அதையடுத்து வந்த திலக் வர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னில் நடையை கட்டினார். அதன் பின், நமன் திர் உள்வந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் சிக்சர் விளாசி 50 ரன்களை கடந்தார். ஆனால், அடுத்த பந்தில் மிட்செல் மார்ஷிடம் கேட்ச் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார், 28 பந்துகளை எதிர்கொண்டு, தலா 4 பவுண்டரி, சிக்சர்களுடன் 54 ரன்களை விளாசி இருந்தார். பின்னர், கோர்பின் பாஷ் களமிறங்கினார். நமன் திர், கோர்பின் இணை, 19வது ஓவரில் 19 ரன்களை வெளுத்து வாங்கியதால், மும்பை அணி, 200 ரன்களை கடந்தது.

ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில், நிகோலஸ் பூரனிடம் கேட்ச் தந்து கோர்பின் (20 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில், மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. லக்னோ தரப்பில், மயங்க் யாதவ், ஆவேஷ் கான் தலா 2, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணியின் துவக்க வீரர்கள் அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

இவர்கள் நிதானமாக ஆட்டத்தை துவக்கி ரன்களை சேர்த்த நிலையில், 3வது ஒவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, மார்க்ரமை (9 ரன்) வீழ்த்தினார். அதனால், மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் இணை சேர்ந்தார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பூரன் 27 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஆயுஷ் படோனி, மார்ஷ் உடன் இணை சேர்ந்தார். 9.5 ஓவரில், லக்னோ, 3 விக்கெட் இழந்து 100 ரன்னை எட்டியது. இந்நிலையில், மார்ஷ் (34 ரன்), ஆயுஷ் படோனி (35 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, 16வது ஓவரை வீசிய பும்ரா, 2 ரன் மட்டுமே தந்து, டேவிட் மில்லர் (24 ரன்), அப்துல் சமத் (2 ரன்), ஆவேஷ் கான் (0 ரன்) ஆகியோரை வீழ்த்தி லக்னோவை நிலைகுலையச் செய்தார். 19வது ஓவரில், ரவி பிஷ்னோய் (13 ரன்), 9வது விக்கெட்டாக ஆட்டமிழக்க, லக்னோவின் படுதோல்வி உறுதி செய்யப்பட்டது. 20 ஓவரின் கடைசி பந்தில் லக்னோவின் கடைசி விக்கெட்டாக திக்வேஷ் ரதி (1 ரன்) வீழ்ந்தார். 20வது ஓவர் முடிவில், லக்னோ 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால், 54 ரன் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில், பும்ரா 4, போல்ட் 3, ஜாக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியை அடுத்து, புள்ளிப் பட்டியலில் மும்பை அணி, 12 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு முன்னேறியது.