தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளை காப்பாற்றும் நல்லெண்ணத்திலும் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர வரலாற்றோடு பின்னி பிணைந்தது ஜல்லிக்கட்டு. சங்க காலம் தொட்டே ஏறு தழுவுதல் என்னும் பெயரில், தமிழர்கள் காளைகளை அடக்கி, பரிசுகளை அள்ளியதோடு, தனக்கு பிடித்த பெண்ணை கரம் பிடிக்கவும் செய்தனர். ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகள்.
வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணின் பண்பாட்டு நீட்சியாகவே அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் காட்சியளிக்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளை அவமதிக்கும் வகையில் ஆளும் தவெக அரசு தற்போது நடந்து கொள்கிறது. சட்டசபையில் கடந்த வாரம் சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்கிற பொருள்படும் வகையில் பேசியுள்ளார். விளையாட்டின் தன்மையை சீரழிக்கும் வகையில் மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்காகும் செலவை அலங்காநல்லூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க செலவிடலாம் என தெரிவித்துள்ளார். தவெக எம்எல்ஏவின் பேச்சு, தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டை ஒழித்து கட்ட நினைக்கும் பீட்டா போன்ற அமைப்புகளுக்கு நாவில் தேன் வார்த்தாற்போல் அமைந்திருக்கும். இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கவில்லை. எனவே தவெக அரசும், ஜல்லிக்கட்டை ஒழித்து கட்ட தூபம் இடும் வேலையை செய்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டை நிறுத்த சதி நடந்தபோது, தமிழகத்தில் நடந்த வரலாற்று புரட்சிமிக்க போராட்டத்தை, ஆளும் தவெக அரசு மறந்துவிட்டதோ என எண்ணவும் தோன்றுகிறது. அன்று மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களின் தன்னெழுச்சியாக நடந்த போராட்டங்கள் காரணமாக மீண்டும் அப்போட்டிகளை நடத்த வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த கால வரலாற்றை மறைக்கும் வகையில், தவெக எம்எல்ஏ பேச்சு உள்ளது.
அவரது பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக வலைத்தளவாசிகளும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக ‘நானே ஒரு மாடுபிடி வீரர்தான்’ என சமாளிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை ரூ.50 கோடி செலவில் மீண்டும் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்தால், தவெக சட்டமன்ற உறுப்பினர் அதை தனி கோரிக்கையாக வைத்திருக்கலாம். அதற்கு பதிலாக ஜல்லிக்கட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி தேவையற்றது என கருத்து சொல்ல முற்பட்டதால்தான் எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்திட நீதிமன்றங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகின்றன. விலங்குகள் நல ஆர்வலர்களும் இதை எப்படியாவது தடுத்து நிறுத்திட, அடிக்கடி வழக்குகள் போட்டு வரும் நிலையில், ஒரு ஆளும்கட்சி எம்எல்ஏவின் அர்த்தமற்ற பேச்சு, அதற்கு தூபம் போடுகிற மாதிரி இருக்க கூடாது.
கேரளத்தில் யானைகளை வைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது போல, தமிழகத்தில் காளைகளை வைத்தே போட்டிகள் மரபு மாறாமல் இன்றும் நடத்தப்பட்டு வருகின்றன. நம் தமிழ் சமூகத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் சிதைக்கும் எந்தவொரு கருத்தையும் முளையிலே கிள்ளி எறிய நாம் முன்வரவேண்டும். சினிமா மோகத்தால் கட்டமைக்கப்பட்ட தவெக அரசு இத்தகைய கருத்துகளை விதைக்க தொடங்கினால், அடுத்து ஒரு மெரினா புரட்சியை எதிர்கொள்ள நேரிடும்.



