Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து சமூகநீதி துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை செயல்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை: நிதி அமைச்சர், தலைமை செயலாளர் பங்கேற்பு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், முதல்வர் விஜய் தலைமையில் சமூகநீதி துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர், தலைமை செயலாளர் பங்கேற்றனர். முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு தமிழகத்தின் முதல் பட்ஜெட் இந்த மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து அனைத்து துறை வாரியான மானிய கோரிக்கை கூட்டமும் நடைபெறும்.

இதற்கு முன்னோட்டமாக, முதல்வர் விஜய் அனைத்து துறைகளுடன் கடந்த 2ம் தேதி முதல், வருகிற 22ம் தேதி வரை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி முதல் நாளான கடந்த 2ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் காந்திராஜ், மரியவில்சன், தலைமை செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வி ஆகிய துறைகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் சமூகநீதி துறையின் செயல்பாடுகள், நடப்பு நலத்திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள், மாணவர் விடுதிகள் மேம்பாடு, திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் கேட்டறிந்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வி.சம்பத்குமார் மற்றும் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது நிதி அமைச்சர் மரியவில்சன், தலைமை செயலாளர் சாய்குமார் உடன் இருந்தனர். வருகிற 22ம் தேதி உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அதிகாரிகளுடன் முதல்வர் தனது ஆய்வை நிறைவு செய்கிறார். இந்த ஆய்வு கூட்டத்தில், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் தமிழக அரசு பட்ஜெட்டில் இடம்பெறும்.