கர்நாடகாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமார், அவர் தலைமையிலான ஆட்சியில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தபின், கடந்த 2023-24ம் நிதியாண்டில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வராக இருந்த சித்தராமையா தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். நடப்பு 2026-27ம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய முற்பட்டபோது, ஆட்சி தலைமை மாற்றத்திற்கான போர்க்கொடியை டி.கே.சிவகுமார் உயர்த்தினார்.
நான் முதல்வராக பதவியேற்றபின், முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், சித்தராமையா தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கக்கூடாது என்று நெருக்கடி கொடுத்ததுடன் மாநில நிதி துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் வாய்மொழியாக உத்தரவிட்டதாக தெரியவருகிறது. இதனால் சோர்வடைந்த சித்தராமையா, வேறு வழியில்லாமல் 2026-27ம் நிதியாண்டின் முழு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், அதில் புதிய திட்டங்கள் அறிவிக்காமல் ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு மட்டும் செய்தார்.
மாநில வரலாற்றில் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையா, தனது 17வது பட்ஜெட்டில் சிறப்பாக திட்டங்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாக உப்புக்கு உதவாத பட்ஜெட் தாக்கல் செய்தாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்காமல் தவிர்த்தபோதே, ஆட்சி மாற்றம் உறுதி என்பதற்கான அறிகுறி உருவாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் கணித்தது கடந்த மாதம் இறுதியில் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ததின் மூலம் உறுதியாகியது.
இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டு மட்டுமில்லாமல் வரும் 2028ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி பிடிக்கும். முதல்வராக மேலும் 5 ஆண்டுகள் தொடருவேன் என்று முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதியாக கூறி வருகிறார். அவரின் லட்சியத்தை அடைய வேண்டுமானால், மாநில மக்களுக்கு சிறப்பான நல்லாட்சி கொடுக்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டுமானால் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டுள்ள டி.கே.சிவகுமார், தனது ஆட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
மாநில முதல்வராக டி.கே.சிவகுமார் இரண்டாண்டுகள் இருந்தாலும், நடப்பு 2026-27ம் நிதியாண்டு பட்ஜெட் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளதால், அவர் மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்தாலும் அது முழுமையாக பட்ஜெட்டாக இருக்காது. வரும் 2027-28ம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மட்டுமே முழு பட்ஜெட்டாக இருக்கும். 2028ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் 2028-29ம் நிதியாண்டில் தாக்கல் செய்வதும் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். இதனால் மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் தனது தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதால், மக்களுக்கு புதிய திட்டங்கள் கொடுக்கும் நோக்கத்தில் வரும் ஜூலை மாதம் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் அல்லது மழைக்கால கூட்டத்தொடரில் நடப்பு 2026-27ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த வாரம் அல்லது இம்மாத இறுதியில் மீண்டும் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
