ஹங்கேரியில் நடைபெற்ற புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
தொழில்முறை வீரர்களுக்கான பிஎஸ்ஏ காப்பர்-லெவல் தொடரில் சேலத்தை சேர்ந்த வேலவன் (54வது ரேங்க்) முதல் முறையாக பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில் மலேசியாவின் இயான் யோவ் (19வது ரேங்க்) உடன் மோதிய வேலவன் 11-2, 11-9, 11-8 என்ற நேர் செட்களில் வென்றார்.
அடுத்து அரையிறுதியில் சக இந்திய வீரர் வீர் சோட்ரானியுடன் மோதிய அவர் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று பைனலுக்கு தகுதி பெற்றார்.பரபரப்பான இறுதிப் போட்டியில் உள்ளுர் நட்சத்திரம் பலாஸ் பர்காஸ் சவாலை சந்தித்த வேலவன் 11-4, 11-2, 11-3 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இவர் ஏற்கனவே உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம், ஆசிய போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



