Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சேலத்தில் பயங்கரம்; துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூர கொலை: 3 மூட்டைகளில் கட்டி குடிநீர் தொட்டிகளில் வீச்சு

* 7 துண்டுகளாக உடல் பாகங்களை மீட்டு விசாரணை

சேலம்: சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை 3 மூட்டைகளில் கட்டி தண்ணீர் தொட்டிகளில் மர்மநபர்கள் வீசியுள்ளனர். 7 துண்டுகளாக பாகங்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (62), அங்குள்ள சவுண்டம்மன் கோயில் பூசாரியாக உள்ளார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், குடும்பத்துடன் வசிக்க ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ரமேஷ், மனைவி ஜமுனாராணி (57), மகன் கௌதம்ராஜ் (33) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் தனது திருமணநாளையொட்டி தஞ்சை, கும்பகோணம் கோயில்களுக்கு சென்றிருந்தார்.

நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டில் பயன்பாட்டிற்காக குழாயை திறந்தபோது, வெளியேறிய தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் கொண்டு தந்தையும் மகனும் மாடிக்கு சென்று, ஒரு சின்டெக்ஸ் தொட்டியை திறந்து பார்த்தனர். உள்ளே பிளாஸ்டிக் மூட்டை கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது, மனித உடலின் கை, கால்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த அவர்கள், அருகிலுள்ள மற்றொரு தண்ணீர் தொட்டியையும் திறந்தனர். அதனுள் துர்நாற்றம் வீசிய நிலையில், மற்றொரு மூட்டை கிடந்தது. உடனே ரமேஷ், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, வீட்டு தண்ணீர் தொட்டிகளில் 2 மூட்டைகளில் மனித உடல் பாகங்கள் கிடக்கிறது. யாரையோ கொலை செய்து வீசியுள்ளார்கள் எனக்கூறியுள்ளார்.

போலீசார், மோப்பநாய் பிரிவு, தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்தனர். மோப்பநாய் ஜூலியை மாடிக்கு அழைத்துச் சென்று மோப்பம் பிடிக்க வைத்தனர். அது மாடியிலேயே சுற்றித்திரிந்து விட்டு, கீழே இறங்கியது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சென்று, கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். பிறகு 2வது தண்ணீர் தொட்டியில் இருந்து மற்றொரு மூட்டையை வெளியே எடுத்தனர். அதனுள் பெண்ணின் தலை, இடுப்புக்கு மேல் பகுதி உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டு துண்டாக இருந்தன. மொத்தமாக 6 பாகங்களை எடுத்த நிலையில், கொலையான பெண்ணின் இடுப்பு பகுதி மட்டும் இல்லாமல் இருந்தது. அந்த பாகத்தை வேறு எங்கேனும் போட்டு வைத்துள்ளார்களா? என மற்ற வீடுகளின் தண்ணீர் தொட்டிகளில் போலீசார் தேடினர்.

அதில், ரமேசின் பின்வீடான சீனிவாசன் என்பவரது வீட்டு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி சிலாப்பிற்கு அடியில் மற்றொரு மூட்டை இருந்தது. அதனை திறந்தபோது, பெண்ணின் இடுப்பு பகுதி இருந்தது. இதன் மூலம் 7 துண்டுகளாக கொலையான பெண்ணின் உடல் பாகங்களை முழுமையாக போலீசார் மீட்டனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணை மர்மநபர்கள், ரமேசின் வீட்டு மாடிப்பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி 3 மூட்டைகளில் கட்டி தண்ணீர் தொட்டிகளில் வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையான பெண்ணின் உடல் பாகங்களை சாக்கு பையில் போட்டு, பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை நடந்து 3 நாட்கள் இருக்கும் என போலீசார் கணித்துள்ளனர். உடல் பாகங்களை தண்ணீரில் போட்டு வைத்ததால், அவை அழுகி காணப்பட்டது. இதனால் இறந்த பெண் யார்? என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. அந்த பெண்ணின் கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. அதனை கொண்டு அவர் யார்? என விசாரித்தனர். ரமேசின் வீட்டு மாடிக்கு பக்கத்தில் உள்ள மற்ற வீடுகளின் இருந்து செல்ல முடியும். அனைத்து வீடுகளும் அடுத்தடுத்து நெருக்கமாக உள்ளன. இதனால், ஏதோ ஒரு வீட்டின் வழியே மாடிப்பகுதிக்கு சென்ற மர்மநபர்கள், இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, அதனை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதனிடையே சேலம் அயோத்தியாப்பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த ஜீவானந்தம், அவரது 2 மகள்கள், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அதில் ஜீவானந்தம், தனது மனைவி தங்கமணி (55), கடந்த 28ம் தேதி முதல் மாயமாகிவிட்டார். அவரது கையில் ராஜேந்திரன், கணபதி என பச்சை குத்தப்பட்டிருக்கும் எனக்கூறியுள்ளார். அவர் சங்கர்நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 28ம் தேதி அங்கு வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை, எனக்கூறினார்.

இதையடுத்து ஜீவானந்தத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் பாகங்களை காட்டியபோது அது மனைவி தங்கமணி தான் என உறுதி செய்தார். சங்கர்நகரில் உள்ள டாக்டர் வீட்டிற்கு வேலைக்கு வந்த தங்கமணி, அரிசிபாளையத்திற்கு எப்படி சென்றார், அவரை யார் அழைத்துச் சென்று கொலை செய்தனர் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து, உடல் பாகங்களை குடிநீர் தொட்டிக்குள் போட்ட இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்காரம் செய்து படுகொலையா?

கோயில் பூசாரி ரமேஷ் வீட்டில் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், தங்கமணியை அழைத்து வந்து படுகொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக படுகொலை செய்து உடல் பாகங்களை மூட்டைகளில் கட்டி போட்டிருப்பதால், பெரும் வன்மத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, பிறகு கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கலாமோ? என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமையலர் உள்பட 3 பேரிடம் விசாரணை

தங்கமணி கொலை செய்யப்பட்டு கிடந்த வீட்டின் அருகில் வசிக்கும் சமையலர் ஒருவர், கல்லூரி மாணவர்கள் 2 பேர் என 3 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்களில், சமையலர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. காரணம், அவரது உறவினர், கொலையான தங்கமணியோடு சிலரது வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் தந்தை, முதல் கணவர் பெயர்

கொலையான தங்கமணியின் கையில் ராஜேந்திரன், கணபதி என்று 2 பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை அடையாளமாக வைத்தே ஜீவானந்தம் அது தனது மனைவி எனக்கூறி அடையாளம் காட்டினார். அவரது 2 மகள்களும் அந்த பெயர்களை பார்த்து உறுதி செய்தனர். அவர்கள் கூறுகையில், தாய் தங்கமணியின் கையில் அவரது தந்தை கணபதி மற்றும் முதல் கணவர் ராஜேந்திரன் பெயரை பச்சை குத்தியிருந்தார் எனக்கூறினர். ஜீவானந்தம், தங்கமணிக்கு 2வது கணவராவார்.