Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விபச்சார விடுதிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் குற்றவாளிகளே: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: விபச்சார விடுதிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் குற்றவாளிகள் தான் என்று கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் ஞாரைக்கல் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள், விபச்சார விடுதி உரிமையாளர், வாடிக்கையாளர்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஒருவர், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

தான் வாடிக்கையாளர் என்பதால் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். விபச்சார விடுதிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை பிறப்பித்திருந்ததால் இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், விபச்சார விடுதிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் குற்றவாளிகள் தான் என்று தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் தெரிவித்திருந்த விவரங்கள் வருமாறு: வணிக ரீதியான பாலியல் சுரண்டலை தடுப்பதே விபச்சார தடுப்பு சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் சுரண்டல் நடைபெறும் நிலையில், பல்வேறு சூழ்நிலைகளின் அழுத்தத்தால் இந்தத் தொழிலுக்கு வரும் பெண்கள் ஆனால் விடுதி நடத்துபவர்கள் தான் அதன் மூலம் லாபம் அடைகின்றனர். மேலும் பாலியல் சேவையை பெறுவதற்காக பணம் கொடுத்து வரும் வாடிக்கையாளரும் அந்த வணிக பரிவர்த்தனையில் நேரடியாக பங்கேற்பவர் என்பதால் அவருடைய குற்றவியல் பொறுப்பு நீங்காது. இவ்வாறு நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

விபச்சார விடுதிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல என்று ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கேரள உயர்நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.