Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உடைபட்ட பொய்மை

இந்தியாவின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படுவது மக்களவை தேர்தல். அதன்படி, 19வது மக்களவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம்தேதி நடந்தது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளில் 5ம்கட்ட மக்களவை தேர்தல் நாளை (20ம்தேதி) நடக்கிறது. 6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 25ம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதியும் நடக்கிறது. இதையடுத்து ஜூன் 4ம்தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

பரபரப்பான தேர்தல் களத்தில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி ஒரு புறமும், 10 ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாஜ மறுபுறமும் நின்று மோதுகிறது. ஆட்சியின் சீரழிவுகளை மட்டுமே முன் வைத்து இந்தியா கூட்டணியின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால் தேர்தல் பரப்புரை என்ற பெயரில் வெறுப்புரையை கக்குவது பாஜவின் வாடிக்கையாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியின் பிரசாரங்கள் அனைத்தும் சர்ச்சைகளின் உச்சமாக நிற்கிறது.

10 ஆண்டுகளாக என்ன செய்தோம் என்று சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல் மட்டும் பிரதானமாக உள்ளது. காங்கிரஸ் இந்துக்களின் சொத்துகளை பிரித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடும் என்பது தொடங்கி, லேட்டஸ்டாக ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்பது வரை இந்த சர்ச்சை நீண்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை இழிவுபடுத்தும் பணியையும் பாஜ கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பெண்களுக்கான விடியல் பேருந்து பயணத்தை வசைபாடியுள்ளார் பிரதமர். இந்த திட்டத்தின் காரணமாகவே மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லாமல் போனது என்று ஒப்புக்கு ஒரு காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நாடு தழுவிய பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் கொடுத்துள்ள எளிய விளக்கம், தற்போது தேசம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

2019ல் 3.28 கோடி என்றிருந்த சென்னை மெட்ரோ ரயில் பயணங்கள் 2023ல் 9.11 கோடியாக உயர்ந்துள்ளதே தவிர குறையவில்லை என்று கோடிட்டு காட்டியுள்ளார். அதோடு மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு ஒப்புக்கொண்டபடி நிதியை தரவில்லை. இதனால் அந்த திட்டத்தையே முடக்கி விட்டார் பிரதமர் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் முதல்வர். இவை அனைத்திற்கும் மேலாக பெண்களின் முன்னேற்றம் சார்ந்த விடியல் பயணத்திட்டத்தின் மீது வன்மம் ஏன் என்பதற்கான அடித்தளத்தையும் அம்பலமாக்கியுள்ளார்.

பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் சூழ்ந்தது ஆர்எஸ்எஸ் இயக்கம். அதன்பின்புலத்தில் இருந்து வந்தவர் பிரதமர். எனவே பெண்களின் முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் பிரதமர் என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லியுள்ளார் முதல்வர். ‘‘பாஜவின் பிளவுவாதக்கனவு ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு வெறுப்பு அகலும்,’’ என்று முடிவுரையாக முதல்வர் குறிப்பிட்டுள்ளது மக்கள் மனதில் முன்னுரையாக நிறைந்துள்ளது என்பதே நிதர்சனம்.