Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

மார்பக புற்றுநோய் பரிசோதனை; நான்கில் ஒருவருக்கு தவறான ரிசல்ட்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய் ஆகிய 5 புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது.

இந்த மார்பக புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்கள் அனைத்தும் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் வரும். ஆனால், மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும். மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது. பொதுவாக, 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர தொடங்கும். 60 வயதுக்கு மேல் 8ல் 1 பெண்ணுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் புற்றுநோயால் இறக்கும் 70 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் சென்னை மார்பக மையம் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மார்பகப் பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் குறைவாக உள்ளது. ஓரளவு புரிதல் உள்ளவர்கள் கூட மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளும்போது சில விஷயங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதனால், நான்கில் ஒருவருக்கு தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மார்பக மையத்தின் இயக்குநர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா தலைமையில் கடந்த ஆண்டில் 12 வயது முதல் 93 வயது வரை உள்ள 12,156 பேரிடம் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. அதில், நோயாளிகளின் உடல் நிலை, மருத்துவ தரவுகள், பரிசோதனை விவரங்கள், அதன் முடிவுகள் என அனைத்து நிலையிலான தகவல்களும் அப்போது மதிப்பீடு செய்யப்பட்டன.

குறிப்பாக, ரத்தப் பரிசோதனை, திசு பரிசோதனை (Biopsy), ஸ்கேன் பரிசோதனைகளை தனித்தனியாக வெவ்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளும்போது அதன் முடிவுகள் தவறாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக அந்த ஆயவில் தெரியவந்துள்ளது. வெவ்வேறு ஆய்வகங்களில் மார்பக திசு பரிசோதனை (Biopsy) செய்தவர்களில் 25 சதவீதம் பேருக்கு அந்த முடிவுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. அதனால், மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதாவது, மொத்தம் இருந்த 12,156 நோயாளிகளில், 479 பேர் திசு பரிசோதனை செய்திருந்தனர். அவர்களில் 120 பேருக்கு மீண்டும் பயாப்ஸி சோதனை தேவைப்பட்டது. அவ்வாறு மேற்கொண்டபோது அதில் 75 பேருக்கு (62.5%) புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 37.5 சதவீதம் பேருக்கு சாதாரண கட்டி என்பதும் தெரியவந்தது.

அதேபோன்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 50 சதவீதம் பேரின் முடிவுகளும் முரணாக இருந்தன. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு (51%) முறையாக மேமோகிராம் பரிசோதனை செய்யவில்லை என்பதும் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா கூறியதாவது:

மார்பக கட்டிக்காக ஒரு சிறிய மருத்துவமனை அல்லது கிளினிக்குக்கு செல்லும்போது, அங்கிருந்து ஸ்கேன் செய்ய ஒரு இடத்துக்கும், திசு பரிசோதனைக்கு மற்றொரு இடத்துக்கும் நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அலைக்கழிக்கப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் காத்திருக்கவும், உளைச்சலுக்கு உள்ளாகவும் நேரிடுகிறது. அதுமட்டுமல்லாமல், பரிசோதனை முடிவுகள் தவறாகி நோயாளியின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

இதற்கு ஒரே தீர்வு, ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்களுக்கு (one-stop centre) மக்கள் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அந்த மையத்தில், மருத்துவரின் நேரடிப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் திசு பரிசோதனை ஆகிய மூன்றையும் சராசரியாக 125 நிமிடங்களில் மேற்கொண்டு விடலாம். திசு பரிசோதனை முடிவுகள் 72 மணி நேரத்துக்குள் கிடைத்துவிடும். இதன் மூலம் சிகிச்சையை தொடங்க வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. இரண்டு அல்லது மூன்றாவது முறை மருத்துவமனைக்கு செல்லும்போதே முறையான சிகிச்சையை தொடங்கிவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அறிகுறிகள்

  • மார்பில் வலி இல்லாத கட்டி அல்லது வீக்கம்.
  • மார்பக தோலில் அதீத சுருக்கம்.
  • அக்குளில் வலியில்லாத கட்டி.
  • மார்பகத்தில் புண் ஏற்பட்டு ரத்த கசிவு.

தடுக்கும் வழிகள்

மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சுயபரிசோதனை அவ்வப்போது செய்துகொள்ளவேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை சென்று `மேம்மோகிராம்’ பரிசோதனை செய்யவேண்டும். உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்.