4 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியுடன் இந்தியா இன்று மோதல்: கால்பந்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பிபா சார்பிலான அட்டவணைப்படி, உலகத் தரவரிசையில் 138 வது இடத்திலுள்ள இந்திய கால்பந்து அணி, 3 நட்பு போட்டியில் பங்கேற்கிறது. கடந்தவாரம் பெங்களூருவில் 44வது ரேங்கில் உள்ள பனாமாவுக்கு எதிராக ஆடிய இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் போட்டியை டிரா செய்து அசத்தியது. இன்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் பிபா தரவரிசையில் 5வது இடத்திலும் உள்ள 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வலுவான பிரேசிலுடன், முதன் முறையாக மோதுகிறது.
உலகத் தரமான அணிகளுடன் விளையாடுவதால், கால்பந்து ரசிகர்களை ஈர்க்கவும், இந்திய அணி வீரர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவும் முடியும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு நம்புகிறது. இந்திய அணியில் ரியான் வில்லியம்ஸ், அன்வர் அலி, அனிருத் தபா உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பிரேசில் அணியில் முன்கள வீரர் வினிசியஸ் ஜூனியர், ரயான், தற்காப்பு வீரர் கேபிரியல், மத்திய களத்தில் புருனோ என அபாய வீரர்கள் உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குதொடங்கி நடைபெறும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பிரேசிலுக்கு எதிரான போட்டிக்கு மட்டும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு ரூ. 50 கோடி வரை செலவு செய்துள்ளதாக தெரிகிறது. வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட 90 பேர் கொண்ட பிரேசில் அணியினர் வந்து செல்ல, தனி விமான செலவு மட்டும் ரூ. 6 கோடி தரப்பட்டுள்ளது.
எதுவும் நடக்கலாம்; கோச் ஜமீல் பேட்டி;
இந்திய அணியின் பயிற்சியாளர் காலித் ஜமீல் கூறுகையில், ”இது எங்கள் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்று, எனவே நாங்கள் சிறப்பாகச் செயல்படுவது அவசியம். பிரேசில் உலகின் சிறந்த அணிகளில் ஒன்று. நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். களத்தில் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்போது, எதுவும் நடக்கலாம்,” என்றார்.


