Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மூளைச்சலவை

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் முதல்வர் உள்பட அமைச்சர்கள் தங்கள் கள ஆய்வு பணிகளை ரீல்ஸ் எடுத்து விளம்பரம் தேடுவதிலும் பிரசாரம் செய்து தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்வதிலும் தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் மக்கள் நலப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. மாறாக சினிமா போன்று யதார்த்த வாழ்விலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அதிரடி காட்டும் அரசாக சி்த்தரித்து பதின்ம வயது மாணவ, மாணவிகளை மூளைச்சலவை செய்து வருகின்றனர்.

அவர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டு அவர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள். இந்நிலையில், தவெக அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அவர்களை கைது செய்வது, வழக்கு தொடர்வது என்று மக்களை திசை திருப்பி வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் என்று சொல்லும் தவெக அரசு, ஊழல் வழக்கில் சிக்கி வழக்கை சந்தித்து வரும் மு்ன்னாள் அமைச்சர்களை கட்சியில் இணைத்து கொண்டு நட்பு பாராட்டுகிறது. இவர்களால் எப்படி ஊழலற்ற நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.

200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொல்லிவிட்டு தற்போது மின்நுகர்வோர்கள் கடந்த முறை ரூ.500 கட்டிய இடத்தில் ரூ.1500 கட்டணம் செலுத்துகிறார்கள். ரூ.1500 மின்கட்டணம் செலுத்தியவர்கள் ரூ.2500 வரை கட்டுகிறார்கள். இப்படி நுட்பமாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தவெக அரசு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். 200 யூனிட் இலவச மின்சாரம் தர இயலாவிட்டால் முந்தைய ஆட்சியில் அறிமுகப்படுத்திய 100 யூனிட் மின்சார இலவசத்தை மட்டுமே செயல்படுத்தினால் போதும்.

எனவே மறைமுகமாக உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றது போல் மக்கள் நல திட்டங்களை ஆக்கப்பூர்வமாக அமல்படுத்த தெரியாமல் எதெற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியாளர்கள் மீது பழியை சுமத்தி மக்களை மூளைச்சலவை செய்வதையே இன்்னும் கடைபிடிப்பதை ஏற்க முடியாது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்.

ஆனால் எல்லாரையு்ம் எப்போதும் ஏமாற்றமுடியாது. பள்ளி, கல்லூரி கட்டணத்தை பெற்றோர்கள் தான் கஷ்டப்பட்டு கட்டுகிறார்கள். தங்களுக்கு வேண்டியதை அவர்கள் தங்கள் கடின உழைப்பால் வாங்கி தருகிறார்கள் என்பதை இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். தாய், தந்தையை தங்கள் ஹீரோவாக போற்றுவது மட்டுமே நிஜம்.

யதார்த்த வாழ்க்கையை மீறிய கற்பனையில் மிதக்கும் இளைஞர்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்வதை தவெக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் டெல்லியில் முன்னெடுத்துள்ள போராட்டத்தை பாராட்டுகிறோம்.

நினைத்த நேரத்தில் கிடைக்கும் சொற்ப லாபத்துக்காக இளைய சக்திகள் யாருடைய தூண்டிலிலும் இரையாகிவிடக்கூடாது. எந்தவகையில் மூளைச்சலவை செய்தாலும் இளைஞர்கள் படிப்பு, லட்சியம் ஆகியவற்றில் குறிக்கோளாய் கவனம் செலுத்தி பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.