வீட்டில் 19 வயது காதலனுடன் ‘ஜாலி’ தட்டிக்கேட்ட தந்தையை போக்சோவில் புகாரளித்து உள்ளே தள்ளுவேன் என மிரட்டிய பிளஸ் 2 மாணவி
* காவல் நிலையத்தில் ஆதரவாக நின்ற தாய்: நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறிய போலீஸ்
குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கொத்தனாருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் பிளஸ் 2 படிக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கொத்தனாரை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகள், மகனை கொத்தனார் தான் கவனித்து வந்தார். கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த அடிதடி பிரச்னையில் கொத்தனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காததால், தலைமறைவானார்.
உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் தனது மகள், மகனை பார்த்துக் கொள்ளும்படி கூறினார். இதற்கிடையே கணவர் தனது குழந்தைகளை தனியாக விட்டு விட்டு தலைமறைவான விவகாரம், கொத்தனார் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் தனது மகள், மகனை தொடர்பு கொண்டு பேசி வந்தார். 17 வயதான மாணவி, அந்த பகுதியை சேர்ந்த 19 வயது நிரம்பிய வாலிபரை காதலித்தும் வந்தார். இந்த விபரம் ஏற்கனவே மாணவியின் தாயாருக்கு தெரியும் என்பதால், அந்த வாலிபரை தொடர்பு கொண்டு, தனது மகளுக்கு சாப்பாடு கொடுக்கும்படி கூறி உள்ளார்.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அந்த வாலிபர், கொத்தனார் வீட்டுக்கு வந்து மாணவிக்கு, அதாவது தனது காதலிக்கு உணவு கொடுத்து வந்தார். வாலிபர் வந்ததும், கதவை பூட்டிக் ெகாண்டு இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன் தினம் மாலையும் வழக்கம் போல் வாலிபர் உணவு பார்சலுடன் வர, அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்ற மாணவி கதவை பூட்டிக் கொண்டார்.
இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், கொத்தனாருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அடிதடி வழக்கில் கொத்தனாருக்கு நேற்று முன் தினம் மாலையில் ஜாமீனும் கிடைத்தது. இதனால் அவர் அவசர, அவசரமாக வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். அப்போது வாலிபருடன், மகளும் வெளியே வந்தார். இதை பார்த்ததும் ஆத்திரத்தில் மகளை கண்டித்து தாக்கினார். அந்த வாலிபரையும் கண்டித்தார்.
அப்போது தந்தையுடன் மகள் கடுமையாக தகராறில் ஈடுபட்டார். பின்னர் மகளையும், வாலிபரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். போலீஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில், தந்தையிடம் தகராறு செய்த மகள், உன் மீதே நான் போக்சோ வழக்கு கொடுக்கிறேன். நீ தான் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாய் என காவல் நிலையத்தில் கூறுவேன் என்றார். இதை கேட்டதும், கொத்தனார் உடைந்து போனார்.
காவல் நிலையம் வரை சென்றவர் புகார் எதுவும் வேண்டாம் என கூறிவிட்டு, காவல் நிலையத்தில் இருந்து அழுதபடி சென்று விட்டார். சிறுமியை தனியாக விட முடியாது என்பதால், அவரது தாயாரை போலீசார் தொடர்பு கொண்டனர். காவல் நிலையத்துக்கு வந்த அவர் நான் தான், எனது மகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க கூறினேன். அவர்கள் தவறாக பழக வில்லை. எனக்கு எல்லாம் தெரியும் என கூறி, தனது மகளை அழைத்து சென்று விட்டார். தற்போது இந்த விவகாரத்தில் காவல்துறையும் எதுவும் செய்ய முடிய வில்லை. புகார் எதுவும் இல்லாததால், மாணவியுடன் தனிமையில் இருந்தவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்து விட்டனர்.
