எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வந்தது. 2003ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை ரத்து செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. மேலும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு அவைகளும் முடங்கி வருகிறது. இந்நிலையில் இன்றும் நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். எனினும், தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மணிக்கு கூடிய நிலையில் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.