இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்; காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்தால் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி: முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்யும் போது டி.கே.சிவகுமார் முதல்வராக பதவி ஏற்பார். எங்கள் இருவருக்கும் இடையே எந்த வேற்றுமையும் இல்லை. நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று முதல்வர் சித்தராமையா கூறினார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் இடையில் தலைமை அதிகாரப்போட்டி உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில் கட்சி மேலிட ஆலோசனையின் படி கடந்த சனிக்கிழமை முதல்வர் சித்தராமையா வீட்டுக்கு காலை உணவுக்கு டி.கே.சிவகுமார் சென்றார்.
அங்கு 40 நிமிட ஆலோசனைக்கு பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவோம். எங்களுக்குள் எந்த முரணும் இல்லை என்று கூட்டாக பேட்டி அளித்தனர். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவகுமாரின் சதாசிவநகரிலுள்ள வீட்டுக்கு நேற்று காைல சிற்றுண்டி விருந்துக்கு சென்றார். இருவரும் சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் பேசிய பின்னர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் முன்னாள் எம்பி டி.கே. சுரேஷ் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘ ஆட்சி நிர்வாகத்தில் எந்த குழப்பமும் கிடையாது. முதல்வராக நானே தொடர்கிறேன். துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் நானும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்றால் அதை காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் மேலிடம் எப்போது முடிவு செய்கிறதோ?
அப்போது மாநில முதல்வராக, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதவி ஏற்பார். முதல்வர் மாற்றம் தொடர்பாக கட்சி மேலிட தலைமை ஒருவேளை மாற்றத்தை விரும்பினால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். மேலிட தலைமை அழைப்புவிடுத்தால் நாங்கள் இரண்டு பேரும் டெல்லி சென்று எங்கள் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவோம். காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கேசி வேணுகோபால் பங்கேற்கும் விழாவில் எங்கள் இரண்டு பேருக்கும் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்துள்ளது. எனவே, அவரை சந்தித்து பேசுவோம்’ என்றார்.