எல்லைப் பிரச்சனை விவகாரம்: தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம்
எல்லைப் பிரச்சனை விவகாரத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்திற்கும், கம்போடியாவுக்கும் இடையிலான பிரச்சனை நீண்டகால எல்லை மோதலால் தொடர்ந்து வருகிறது. மேலும், இரு நாடுகளும் எல்லையில் உள்ள பல கோயில்களை உரிமை கோருகின்றன. ஜூலை மாதம் எல்லை பிரச்சனை 5 நாள் மோதலாக மாறியது. இதில் 43 பேர் இறந்தனர். போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு சுமார் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
அக்டோபரில் இரு நாடுகளும் விரிவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது ட்ரம்ப் கோலாலம்பூரில் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கம்போடியா உடனான பிரச்னைக்குரிய எல்லையில் தாய்லாந்து வான்வழி தாக்குதல் நடத்தியதில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் காயம் அடைந்தனர் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் டிசம்பர் 8 அன்று அதிகாலை 5.4 மணியளவில் தாய்லாந்து ராணுவ படைகள் பிரியா விகார் மாகாணத்தின் ஆன்சஸ் பகுதியில் கம்போடிய படைகள் மீது தாக்குதல்களை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளது. நாடு பதிலடி கொடுக்கவில்லை என்றும் நிலைமையை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தரப்பு மேற்கொண்ட மனிதாபிமானமற்ற, மிருக தனமான செயல்களை மிக கடுமையாக கண்டிக்கிறது. இது போன்ற நடவடிக்கை அக்டோபர் 26அன்று இரு நாடுகளின் பிரதமர்களும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரின் சுழற்சி தலைவராக கையொப்பமிட்ட கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையிலான கூட்டு பிரகடனத்தின் கடுமையான மீறலாகும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில்
இருந்து 50,000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களுக்கு சென்றுள்ளதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.. தாய்லாந்து ஒரு போதும் வன்முறையை விரும்பியதில்லை. தாய்லாந்து ஒரு போதும் சண்டையையோ அல்லது படையெடுப்பையோ தொடங்கவில்லை ஆனால் அதன் இறையாண்மையை மீறுவதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று தாய்லாந்து பிரதமர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.