20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்
நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. அங்கு திறந்தவெளி 3 சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு 8000 நிரந்தர பணியாளர்களுக்கும், 10,000 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நிரந்தர பணியாளர்களுக்கும் அதிகப்படியான போனஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் 8.33 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை என்எல்சி சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒப்பந்த பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி நேற்று இரவு முதல் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஒப்பந்த பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.