Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தி பேசிய வழக்கு ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு: உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணை அமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி ஷோபா கரந்தலஜே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அதில், குண்டு வெடிப்பில் தமிழக மக்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கருத்து எந்த உள்நோக்கத்துடனும், தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் தெரிவிக்கவில்லை. எனது கருத்து தமிழர்களை புண்படுத்தியதை புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோரினேன். தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.