Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரவார அமைச்சர்கள்

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல், அமைச்சர்களின் லூட்டிக்கு அளவே இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டசபையை ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி வருவது போல், அமைச்சர்களும் இளைய தலைமுறையை கவர்கிறோம் என்ற போக்கில், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“பூமியில் இருக்குது மூணு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பதில் தப்பு ஒண்ணும் இல்லடா” போன்ற போதை தத்துவப் பாடல்கள் மூலம் பொழுதுபோக்கு ரசிகக் கூட்டத்தை உருவாக்கியவர் நம் முதலமைச்சர். தனது அமைச்சரவையிலும் கூட அத்தகைய மனோபாவத்தை ரசிக்கும் அமைச்சர்களையே உருவாக்கி கொண்டு வருகிறார். அனுமான் வால் போல் அவரது சினிமா அபிலாஷைகள் இப்போது டெல்லி சிறப்பு பிரதிநிதி வரை தொடர்கிறது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு வலம் வருவது வேடிக்கையிலும் வேடிக்கை. இதை எல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, ரசிக்கிற மனநிலையில் இருப்பது வேதனையாகும். தவெக அரசில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக உள்ள சரத்குமார், சமீபத்தில் மாத்திரை ஒன்றை பவுடராக்குவது போன்று வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சரான சரத்குமார், போதைப் பொருளை பயன்படுத்தினாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே எழுந்துள்ளது.

இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட சரத்குமார், தனது குழந்தைக்கு வழங்க வேண்டிய சளி மாத்திரையை நொறுக்கி பவுடராக்கி கொடுத்தேன் என விளக்கம் அளித்தார். இருந்தாலும், குழந்தையே இல்லாத அந்த வீடியோவில் எப்படி குழந்தைக்காக கொடுத்தார் என்றும் உடல்நலமில்லாத குழந்தைக்கு மாத்திரையை யார் இப்படி மகிழ்ச்சியாக கொடுப்பார் என பலரும் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து போதைப் பொருள் தான் பயன்படுத்தினார் என குற்றச்சாட்டி வருகின்றனர். இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக இளைஞரணி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை.

குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோவுக்கு விளக்கம் அளிக்கிறேன் என்ற போர்வையில், த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்கிறார். அமைச்சர்களும் தக்லைப் மூவ்மென்ட் அடிப்படையில் இளைஞர்கள் மத்தியில் ஹீரோ இமேஜ் ஏற்பட இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமூக பொறுப்புள்ள திட்டங்கள், அண்டை மாநிலங்களிடம் இருந்து நம் உரிமைகளை மீட்டெடுத்தல், மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் சமூக அக்கறை ஆகியவையே தவெக அரசுக்கு இப்போதைக்கு தலையாய தேவையாக உள்ளது. அதை விடுத்து அரசும். அமைச்சர்களும் ஆரவார அரசியலிலே காலம் தள்ள நினைத்தால், வரும் இடைத்தேர்தலில் அதற்குரிய விலையை பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.