Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதல் முறிவால் காதலியை கொன்ற காதலன்; சூட்கேசில் அடைக்கப்பட்ட மாடல் அழகியின் சடலம் மீட்பு: வனப்பகுதியில் புதைத்த பயங்கரம்

வியன்னா: ஆஸ்திரியாவில் மாயமான சமூக வலைதள பிரபலத்தின் உடல் வனப்பகுதியில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரைச் சேர்ந்தவர் ஸ்டெபானி பைபர் (31). பிரபல அழகு கலை நிபுணராகவும், மாடல் அழகியாகவும், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்த இவர், கடந்த வாரம் காணாமல் போனார். முன்னதாக, நவம்பர் 23ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்து ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தனது தோழிக்கு ‘நான் பத்திரமாக வந்துவிட்டேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில், ‘மாடிப்படியில் யாரோ இருப்பது போல் பயமாக இருக்கிறது’ என்று மற்றொரு செய்தியை அனுப்பிய நிலையில், அவர் மர்மமான முறையில் மாயமானார். இது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஸ்லோவேனியா எல்லையில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றின் அருகே கார் தீப்பிடித்து எரிவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. விசாரணையில் அது ஸ்டெபானியின் முன்னாள் காதலருடையது எனத் தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 31 வயதான அந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ‘காதலில் ஏற்பட்ட முறிவின் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஸ்டெபானியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்’ என்று அவர் ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்லோவேனியா வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சூட்கேஸை தோண்டி எடுத்து, உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்டெபானியின் உடலை போலீசார் மீட்டனர். சடலத்தை மறைக்க உதவியதாகக் காதலனின் சகோதரர் மற்றும் வளர்ப்புத் தந்தையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.