ஆக்ராவில் சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு; தலை, கைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார்: கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு
கூடுவாஞ்சேரி: ஆக்ராவில் டிராலி சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. தலை, கைகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கூடுவாஞ்சேரியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கடந்த 5ம் தேதி டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. ஆக்ரா ரயில் நிலையத்தை நெருங்கும்போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் கடும் துர்நாற்றம் வீசியதால், ஆக்ரா ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது சிவப்பு நிற டிராலி சூட்கேசில் தலை, கைகள் இல்லாத பெண்ணின் சடலம் துண்டு, துண்டாக வெட்டி 2 கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடல் பாகங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூக்கு கண்ணாடி போட்டிருந்த இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த இளைஞரும் சூட்கேஸை வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அந்த இளம் பெண்ணும், இளைஞரும் கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் சூட்கேசுடன் பயணித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆக்ரா ரயில்வே போலீசார், கூடுவாஞ்சேரி போலீசார் உதவியுடன் விசாரித்தபோது, கூடுவாஞ்சேரி மசூதி அருகில் உள்ள ஒரு வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதாக வந்த தகவலின்பேரில் சென்று பூட்டை உடைத்து பார்த்தனர். அங்கு, பிரியாணி செய்யக்கூடிய டபராவில் ரத்தமும், மேல் மூடியில் மைதா மாவும் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அதை கைப்பற்றி ரத்த சோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஹயத்துன்நிஷா (38) என்பவர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் வாடகைக்கு தங்கி வந்தார். அவர், சென்னையை சேர்ந்த ஜகுர்கான் என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் திருமணம் செய்து விட்டு சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு யூசுப்கான் (19) என்ற மகன் உள்ளார். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் மகனுடன் தங்கியது ெதரியவந்தது.
இதனிடையே ஹயத்துன்நிஷா, தனது மகனிடம், ‘ராகுல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யூசுப்கான், கோபத்தில் பெருங்களத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இதனால் ஹயத்துன்நிஷா வீட்டை காலி செய்து விட்டு கூடுவாஞ்சேரி மசூதி அருகில் உள்ள முகமதுரபி வீட்டில் வாடகைக்கு தங்கினார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3ம் தேதி ஹயத்துன்நிஷாவை பார்க்க ஒரு இளம் பெண்ணும், இளைஞரும் வந்துள்ளனர். அவர்கள் பற்றி வீட்டு உரிமையாளர் முகமதுரபி விசாரித்தபோது, ‘எனது தம்பி மற்றும் அவரது மனைவி’ என்று ஹயத்துன்நிஷா கூறியுள்ளார். இந்நிலையில் 2 வாரமாக தங்கி இருந்த அவர்கள் திடீரென வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டபோது, ‘ஹயத்துன்நிஷா எங்கே’ என்று முகமதுரபி கேட்டுள்ளார். அதற்கு ‘எனது அப்பா இறந்து விட்டார். ஏற்கனவே எனது அக்கா ஹயத்துன்நிஷா சென்றுவிட்டார். நாங்கள் ஊருக்கு செல்கிறோம். திரும்பி வந்ததும் வாடகை தருகிறோம்’ என்று ராகுல் கூறியுள்ளார். இதற்கிடையேதான் டெல்லி ஆக்ரா ரயில் நிலையத்தில் தலை மற்றும் கைகள் இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹயத்துன்நிஷா மகன் யூசுப்கான், கூடுவாஞ்சேரி போலீசில் அளித்த புகாரில், ‘ எனது அம்மாவை காணவில்லை’ என்று கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆக்ராவில் இருந்து வந்த ரயில்வே போலீசார் தலை மற்றும் கைகள் கூடுவாஞ்சேரியில்தான் உள்ளது என்று கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஹயத்துன்நிஷா செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப்பில் உள்ளது. ஹயத்துன்நிஷாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஒருவேளை அவரை பார்க்க வந்த தம்பதியினர்தான் ஹயத்துன்நிஷாவை கொலை செய்தார்களா அல்லது ராகுலை திருமணம் செய்யபோவதாக ஹயத்துன்நிஷா கூறியதால் அவரது பிரிந்து சென்ற கணவர் அடியாட்களை வைத்து தீர்த்துக்கட்டினாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 2 தனிப்படையினர் அசாம், ஒடிசா ஆகிய இடங்களுக்கும் விமானம் மூலம் விரைந்துள்ளனர். மற்றொரு தனிப்படையினர் சென்னையிலும் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து 20 நாட்களான நிலையிலும் தலை, கைகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



