Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழிபோடும் பாஜ

பெண் கல்விக்கு இந்தியாவிலே தமிழகமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டபோது, அவற்றை உ.பி. மற்றும் பீகார் அரசியல் தலைவர்களே அதிகம் எதிர்த்து, அம்மசோதாவை தோல்வியடைய வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், ஆளும் பாஜ அரசு, அதை 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்த முன்வரவில்லை. நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்துவிட்டு, அதனோடு சேர்ந்து பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரத்தில் ஒன்றிய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற முன்வந்தது.

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத நாடாளுமன்ற தொகுதிகள் உயரும். தற்போது இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 815 ஆக மாறும். இதில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில், 269 தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகளாக மாற வாய்ப்புள்ளது என பாஜ அரசு பல ஆசை வலைகளை வீசியது.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து கொண்ட எதிர்கட்சிகள் தொடக்கம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 50 சதவீதம் நாடாளுமன்ற தொகுதிகள் உயர்வு என்பது தமிழ்நாட்டிற்கும், உத்தரபிரதேசத்திற்கும் ஒன்றுபோல் அமலாக்கம் செய்யப்பட்டால், வடமாநிலங்கள் வாழவும், தென்மாநிலங்கள் தாழவும் வழிபிறக்கும். எனவே தொகுதி மறுவரையறைக்கு தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு மெஜாரிட்டியோடு இம்மசோதாக்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பாஜ, எதிர்கட்சிகள் மீது பழியை மட்டுமாவது போட்டுவிட்டு செல்வோம் என்ற நோக்கில் மற்றொரு வலையை விரித்தது. அதன்படி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற போவதாக கூறி கொண்டு நாடாளுமன்றத்தில் அதை வாக்கெடுப்புக்கு விட்டது.

மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், பாஜ காட்டிய அவசரம் காரணமாக அந்த மசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதற்காக காத்திருந்த பாஜ, மறுநாளே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்கட்சிகள் தோல்வியடைய செய்துவிட்டன. மகளிர் நலனில் எதிர்கட்சிகளுக்கு அக்கறையில்லை என பேச தொடங்கிவிட்டது. பிரதமர் மோடியும் மக்களுக்கு உரையாற்றுகிறேன் என கூறி கொண்டு, வழக்கம்போல் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டார்.

உண்மையில் கடந்த 2023ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் மகளிர் மீது அக்கறை இல்லாத பாஜவிற்கு, இப்போது திடீர் பாசம் பொத்துக் கொண்டு வருவதை அரசியல் நாடகம் என்பது அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என உண்மையிலே பாஜவிற்கு விருப்பம் இருந்தால், அனைத்து மாநில முதல்வர்கள், எதிர்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் அழைத்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். அதன்பின்னர் மசோதாவை நிறைவேற்ற முற்பட வேண்டும். மகளிர் மசோதாவை வைத்து கொண்டு நாடகமாடும் பாஜவிற்கு தமிழக தேர்தலில் பெண் வாக்காளர்கள் உரிய பதிலடியை கண்டிப்பாக தருவர்.