அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல், இதுவரை 3 முறை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை மார்ச் மாதத்தில் ரூ.144 உயர்த்தப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 1ம் தேதி ரூ.200 உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த மாத நிலவரப்படி முக்கிய நகரங்களில் சராசரியாக ரூ.2,250 வரை விற்கப்பட்டது. தற்போது நடப்பு மே மாதத்தில் அதிரடியாக ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத விலை உயர்வாகும்.
அதிர்ச்சியூட்டும் இந்த விலை உயர்வால் சென்னையில் தற்போது ரூ.3,237, மும்பையில் ரூ.3,024, டெல்லியில் ரூ.3,071, கொல்கத்தாவில் ரூ.3,202 என வர்த்தக காஸ் சிலிண்டர் விற்பனையாகிறது. டெல்லி, மும்பையோடு ஒப்பிட்டால் சென்னையில் தான் சிலிண்டர் விலை அதிகமாக உள்ளது. ஏற்கனவே வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு உணவகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான சிறுஉணவகங்கள், தேநீர் கடைகள், சாலையோர கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேநீர் தொடங்கி அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் 20 முதல் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது நிதர்சனம். 5 மாநில தேர்தல்கள் நடந்து முடியும் வரை, குறைந்த அளவில் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு.
ஆனால் தேர்தல் முடிந்த கையோடு வரலாறு காணாத அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு தான். வளைகுடா நாடுகளில் போர் தொடரும் நிலையில், அதை காரணம் காட்டி தற்போது வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவும் வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம், அனைத்து இந்தியக் குடும்பங்களிலும் எதிரொலிக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் பெரும்குழும நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு கலால்வரியை உயர்த்தி, இந்த விலையேற்றத்திற்கு அஸ்திவாரம் அமைத்துள்ளது. ஆனால் உள்நாட்டில் பரிதவிக்கும் சாமானிய மக்களை பற்றி எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை. இந்தவகையில் தற்போதைய வரலாறு காணாத வர்த்தக காஸ்சிலிண்டர் விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒரு பெரும் தாக்குதலாகும். இதுவும் தொழிலாளர் தினம் கொண்டாடிய நாளில் நடந்திருப்பது நமது நாட்டில் ஒரு கருப்பு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
