Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதுதான் பாஜவின் 3 அம்ச உத்தி வாக்கு திருட்டு, சீட்டு திருட்டு, நன்கொடை திருட்டு: காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அயோத்தி ராமர் கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ளவர்கள் அனைவரும் பாஜ-ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கைக்குரியவர்கள். அதனால் தான் அவர்களால் அந்த அறக்கட்டளையில் இருக்க முடிகிறது. எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது ஆர்எஸ்எஸ்க்கோ பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கோ தெரியாது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இது முழுமையான அரசியல் சார்ந்த நடவடிக்கை. நன்கொடை திருட்டு நடந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதில் ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கை அவமானகரமானது, வெட்கக்கேடானது. நேர்மை, நாணயம், தேசபக்திக்காக மற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்க முயலும் இவர்களே மிகவும் அவமானகரமான வெட்கக்கேடான முறையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

ராமர் கோயிலை கட்டியதற்கும் மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பாக அதை திறந்து வைத்தத்திற்கும் பெருமை தேடிக் கொண்ட பிரதமர் மோடி, நன்கொடை திருட்டு குறித்து இதுவரை வாய்திறக்காமல் மவுனம் காக்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் தொழிலதிபர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை பாஜ நன்கொடையாக குவித்தது. எனவே நன்கொடை வணிகம் என்பது பாஜவின் டிஎன்ஏவிலேயே ஊறியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அறக்கட்டளை இன்று கூடுகிறது: இதற்கிடையே, நன்கொடை திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அறக்கட்டளை தலைவர் நிரித்யா கோபால் தாஸ் தலைமையில் அயோத்தியில் இன்று நடக்கிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நன்கொடை திருட்டை உறுதி செய்த சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கைகள் குறித்து விவாதித்து எதிர்க்கால நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.5 கோடி புனித நூல் திருட்டு

நன்கொடை திருட்டுக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயிலுக்கு தனது குடும்பம் தானமாக வழங்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட ராமசரிதமானஸ் புனித நூல் காணாமல் போயுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன் குற்றம்சாட்டி உள்ளார்.

எதிர்க்கட்சிகளை விசாரிக்க விஎச்பி கோரிக்கை

ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் அலோக் குமார் அயோத்தி துணை கமிஷனர் அசுதோஷ் திவாரிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் ரூ.200 கோடி திருடப்பட்டதாகவும், ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகை திருடப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அத்தகைய குற்றச்சாட்டுகளை காவல்துறை விசாரித்து சரிபார்க்க வேண்டும். வெறுப்பு, விரோதம், பகைமை உணர்வுகளை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது கண்டறியப்பட்டால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு 4 பேர் குழு அமைப்பு

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் கோயில் கணிக்கையும் திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவை பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி அமைத்துள்ளது. இந்த குழு சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து முழுமையாக விசாரிக்க உள்ளது.