Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்: திரிணாமுல் காங். குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் 207 தொகுதிகளில் வென்று பாஜ முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மம்தா தலைமையிலான 15 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கம் முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. பாஜவின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் உள்ள இறைச்சி கடைகளை பாஜவினர் புல்டோசர் மூலம் இடித்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை இணைத்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாஜவின் மாற்றம் வந்து விட்டது. அதுவும் ஒரு புல்டோசருடன் வந்துள்ளது. அப்பட்டமான ரவுடித்தனமான செயலில், பாஜ ஆதரவாளர்கள் கும்பல் நியூ மார்க்கெட் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டு, கடைகளை இடித்து, திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தியது. நம்பிக்கையை பற்றி பேசி, பயங்கரவாதத்தை வழங்கிய ஒரு கட்சியின் கொண்டாட்டம் இது.

தேர்தலுக்கு முன் பயம் வெளியே, நம்பிக்கை உள்ளே. தேர்தலுக்குப் பின், நம்பிக்கை வெளியே, புல்டோசர் உள்ளே. இந்த சம்பவம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்தமான முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டுகிறது. அந்த சமயத்தில் மத்திய படைகள் அங்கிருந்தும் தலையிடவில்லை. அங்கிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைத்தான் விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி டெரிக் ஓ பிரையன் சமூக ஊடக பதிவில், ‘‘இதுதான் பாஜ. இந்த புகைப்படங்களை உலகம் பார்க்கப்படும்’’ என கூறி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பலர், மேற்கு வங்கத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு புல்டோசர் நீதி வழங்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.