பிரச்னைகளை மூடிமறைப்பதற்காகவே தொகுதி மறுவரையறை விவகாரத்தை பாஜக பேசு பொருளாக மாற்றுகிறது: கலாநிதி வீராசாமி எம்பி பேட்டி
பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திரு.வி.க நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில், ‘’அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினர். முன்னதாக திமுக கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி னார்.
இதன்பின்னர் நிருபர்களிடம் கலாநிதி வீராசாமி கூறியதாவது; தமிழகத்தில் நடைபெறக்கூடிய பிரச்னைகளை மூடிமறைப்பதற்காக தான் தொகுதி மறுவரையறை விவகாரத்தை பேசு பொருளாக மாற்றுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் முதல் தேர்தலின்போது 8 கோடி ஜன தொகையும் தமிழகத்தில் 4 கோடி என இருந்தது. அதனால்தான் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையாக உள்ளது. இன்றைய மக்கள் தொகையில் உத்தரபிரதேசத்தில் 20 கோடிக்கு மேலாக உள்ளது. தொகுதி மறுவரையறையின் போது உத்தரபிரதேசத்திற்கு அதிகமான எம்பிக்கள் வருவார்கள்.


