நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜ அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இதில், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டிற்கு, கடந்த 2023ம் ஆண்டின்போது மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டபோதே, அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜ அரசு ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. தற்போது இந்த மகளிர் இடஒதுக்கீட்டை 2029 எம்பி தேர்தலில் அமல்படுத்த உள்ளதாகவும் ஒன்றிய பாஜ அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை எப்படி அமல்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பிரதமர் மோடி தரப்பில் இருந்தோ, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்தோ தெளிவான எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. 2023ம் ஆண்டில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட காலதாமதத்திற்கு தனது தலைமையிலான ஒன்றிய அரசே பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்ளாத பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் மீண்டும் பழைய புராணத்தையே பாடியுள்ளார்.
ஆனால், ‘மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நிற்கும்’ என எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நின்றன. மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாததற்கு விளக்கம் அளிக்காமல், அவர்கள் மீண்டும் மீண்டும் தொகுதி மறுவரையறையை முன்னிறுத்தி பேசினர். இதற்கிடையில் தொகுதி மறுவரையறை மசோதா, 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாவிற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையாக இருக்கிறது.
அந்தவகையில் 352 ஆதரவு வாக்குகள் தேவையாக இருந்தது. நேற்றைய வாக்கெடுப்பில், 528உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 298 உறுப்பினர்கள், ‘ஆம்’ என்று மசோதாவுக்கு ஆதரவும், 230 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மசோதா தோல்வி அடைந்தது. தொகுதி மறுவரையறையோடு இணைத்து மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் கொண்டுவரப்பட்டதால் அதுவும் தோல்வி அடைந்துள்ளது. இந்த திருத்த மசோதா நாடாளுமன்றம் விரும்பும்போது மட்டுமே தொகுதி மறுவரையறை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்க இருந்தது. ஆனால், இந்த தொகுதி வரையறை மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தன.
அவற்றை சமாளிக்க முடியாமல், முதலில் தொகுதி மறுவரையறை மசோதாவில் சில மாற்றங்களை செய்ய ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. தற்போது மசோதா தோல்வியடைந்தது ஒன்றிய பாஜ அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பற்ற வைத்த நெருப்பு ஒன்றிய பாஜ அரசை சுட்டுள்ளது. இதன் எதிரொலியாக மசோதா தோல்வியடைந்து ஒன்றிய அரசின் தன்னிச்சையாக முடிவெடுக்கும் நடவடிக்கைக்கு கடிவாளம் போட்டுள்ளது. தென்னிந்தியாவில் இருந்து ஓங்கி ஒலித்த குரல்களின் நீட்சியாகவே இந்த மசோதா தோல்வியடைந்ததை பார்க்க முடிகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவை தவிர்த்துவிட்டு வடஇந்தியாவை மட்டும் வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் என்ற பாஜ தலைமையின் கனவு தவிடுபொடியாகி உள்ளது.


