Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்

வாஷிங்டன் : 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடியை பலவீனப்படுத்திவிட்டதாகவும் இதுவரை இருந்த மோடி பிம்பம் சரிந்துவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீது சர்வதேச ஊடகங்கள் கவனம் வைத்து இருந்தன. அதன் தொடர்ச்சியாக இந்த தேர்தல் மூலம் மோடி வெல்ல முடியாதவர் என பாஜகவினர் கட்டமைத்த பிம்பம் முதல்முறையாக பொய்த்துவிட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாத மோடி, 2016ம் ஆண்டில் நிதி அமைச்சருக்குக் கூட தெரியாமல் பணமதிப்பிழப்பு அறிவித்தது, ஜம்மு - காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அமித்ஷா நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்ததை சுட்டிக் காட்டிய நியூயார்க் டைம்ஸ், இனி இது போன்ற நடவடிக்கைகள் நடக்காது என்றும் தெரிவித்துள்ளது.

கத்தார் ஊடகமான அல் ஜஸீராவும், 2024 தேர்தல் முடிவுகள் மூலம் மோடியின் பிம்பம் சிதைந்துள்ளது என குறிப்பிட்டு எழுதியுள்ளது. மோடி ஆட்சி அமைந்தாலும் அவரது அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கும் என்றும் எழுதி உள்ளது. பாஜக மற்றும் மோடியின் தேர்தல் பிரச்சாரம் வகுப்புவாத பிரிவினையில் அதிக கவனம் செலுத்தியதால் அக்கட்சியின் தேர்தல் கொள்கை மீது கேள்வி எழுவதாக கூறியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு வளங்களை வழங்குவார்கள் என அவர்கள் பிரச்சாரத்தில் கூறிய நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் என்பது மோடி அரசின் திட்டங்கள் மற்றும் அதன் பொருளாதார தோல்வியே அடிப்படையாக கொண்டதாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கூற்றுப்படி, மோடி தலைமையை அதிகளவிலான இந்திய வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. தமது 23 ஆண்டுகால அரசியலில் முதல்முறையாக பெரும்பாண்மை பெற தவறி உள்ளதாகவும் தேர்தலில் மோடிக்கு நெருக்கமான உரிமையாளர்கள் நடத்தும் பிரபலமான ஊடகங்களில் இருந்து அவர் ஒருதலைப்பட்சமாக ஆதரவு பெற்றதாகவும் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதே போல், டைம் பத்திரிகை தலையங்கத்தில் பிரதமர் மோடி இந்தி - தேசியவாதத்தைக் கையில் எடுத்தும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி கூட்டணியால் மும்பை விட குறைவான தொகுதிகளை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால ராமர் கோவில் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது என்றாலும் அது தேர்தலில் எந்த பலனையும் ஏற்படுத்தவில்லை என்று டைம் பத்திரிகை கூறியுள்ளது.