Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பா.ஜ ஆட்டம்

2014 ல் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அரசு அமைந்த பிறகு, பா.ஜ ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அது எந்தவழியாக இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மகாராஷ்டிரா, அசாம், கோவா, அருணாச்சல் மாநிலங்களில் ஆட்சியை பிடித்த விதம் ஒரு உதாரணம். பா.ஜ கட்டமைப்பே இல்லாத மாநிலங்களில் கூட ஒரு சில ஆண்டுகளில் பா.ஜ ஆட்சியை கொண்டு வருவது மோடி, அமித்ஷாவின் கைவந்த கலை.

அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி அல்லது ஆளும்கட்சிகளை கலகலக்க வைத்து பா.ஜவில் ஐக்கியப்படுத்தி விடுவார்கள். அசாம்முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மா, அருணாச்சல் முதல்வர் பெமாகாண்டு உள்ளிட்டோர் இந்த வழியில் வந்தவர்கள் தான். ஏன் மகாராஷ்டிராவில் கூட சிவசேனாவை இரண்டாக பிளந்ததும், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டேவை கொம்பு சீவி விட்டதும் பா.ஜ தான் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. இது உலகமே அறிந்த உண்மை.

இப்போது அந்த வரிசையில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளத்தை கரைத்துக்கொண்டு இருக்கிறது பா.ஜ. பீகாரின் நீண்ட கால முதல்வர் நிதிஷ்குமாரிடம் இருந்து முதல்வர் பதவியை முதற்கட்டமாக பறித்து இருக்கிறது. பீகார் மாநிலத்தில் இதுவரைக்கும் யாருமே இல்லாத அளவுக்கு 10 முறை முதல்வராக பதவி ஏற்றவர். 19 ஆண்டுகள் 236 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர். அதை விட எல்லாம் தொடர்ந்து 11 ஆண்டுகள் 51 நாட்கள் முதல்வராக இருந்தவர்.

2025 நவம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட லாலு மகன் தேஜஸ்வியாதவை தோற்கடிக்க பா.ஜவின் முகமாக இருந்தவர் நிதிஷ். அவரை முன்நிறுத்தியே மெகா வெற்றியை பா.ஜ கூட்டணி பெற்றது. என்ன ஒரு துரதிருஷ்டம்? பீகாரில் இதுவரை ஒரு பா.ஜ முதல்வர் கூட இருந்ததில்லை. அதற்கான வாய்ப்பு அங்கு உருவானதும் இல்லை. ஆனால் இந்த முறை எல்லாமாநிலங்களிலும் பயன்படுத்தும் பின்புற வழியை மீண்டும் பா.ஜ பயன்படுத்தி விட்டது. ஆம். நீண்ட கால முதல்வர் நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அதற்கு முன்னதாக அவர் பீகார் சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பதவி ஏற்றுக்கொண்டு வந்த பிறகு, இப்போது முதல்வர் பதவியை பா.ஜவுக்கு சரண்டர் செய்து இருக்கிறார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை. முதல்வர் பதவியை அடுத்தவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார் நிதிஷ். இதற்கு முன்பு எத்தனையோ முறை பா.ஜ மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அடிக்கடி மாறி தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டவர் நிதிஷ்.

அதனால் தான் அவர் இத்தனை ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிக்க முடிந்தது. அதனால் தான் அவர் பல்டி ராம் என்று பெயரும் எடுத்தார். இன்னும் 2 ஆண்டுகள் கூடுதலாக முதல்வர் பதவியில் இருந்தால் தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த ஸ்ரீகிருஷ்ண சின்கா சாதனையை தகர்க்க நிதிசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

ஆனால் பா.ஜ அதை விரும்பவில்லை. அதனால் தான் பல்டி ராம் இப்போது சரண்டர் ராம் ஆகிவிட்டார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அமித்ஷா அப்போதே சொன்னார். சாம்ராட் சவுத்திரிக்கு மிகப்பெரிய பதவி காத்திருக்கிறது என்று. ஆனால் இவ்வளவு வேகமாக நிதிஷ் பதவியை பறித்து சாம்ராட் சவுத்திரி வசம் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை.