Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பாஜ உறுப்பினர் சேர்க்கையில் வேகம் பத்தாது.. இலவச செல்போன் எண்ணுக்கு ‘மிஸ்ட் கால்’ கொடுக்க வையுங்கள்: லண்டனில் இருந்தபடி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை உத்தரவு

சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கி வீடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: தமிழகத்தில் கட்சி பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என நம்புகிறேன். கடந்த சில நாட்களாக பாஜ நிர்வாகிகள் மிகக் கடுமையாக களத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாஜவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக, நம்முடைய குடும்பத்தை இன்னும் வேகப்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கக்கூடிய கோரிக்கை, நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நிறைய பேர் நம்முடன் இணைய வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய இலக்கை மிகத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 200 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும். ஒரு நாளில் மண்டல அளவில் 500 பேர் பாஜவில் இணைந்தால் மட்டும்தான் குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை எட்ட முடியும். தினமும் கட்சியில் இணையும் புதியவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

இலவச செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வையுங்கள். அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது, அதில் பிரச்னை இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு மிக முக்கியம். இந்திய அளவில் அதிகளவிலான உறுப்பினர்கள் தமிழக பாஜவில் இருக்க வேண்டும். தமிழக பாஜ ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

‘‘தீபாவளி பரிசு தர்றோம். மிஸ்ட் கால் கொடுங்க என்று சொன்னார்கள். திடீர்னு பார்த்தா எங்க போனில் ‘நீங்கள் பாஜ உறுப்பினாராகி விட்டீர்கள்’ என மெசேஜ் வருகிறது’’ என பொதுமக்கள் பலர் புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தமிழக பாஜவினர் இன்னும் வேகம் காட்டினால் என்னென்ன நடக்குமோ என பலர் அச்சத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.