Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மே.வங்கத்தில் மே 9-ல் பாஜக அரசு பதவியேற்பு விழா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, முதல் முறையாக வெற்றி பெற்றுள்ள பாஜக அரசின் பதவியேற்பு விழா வரும் மே 9 அன்று நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழா வரலாற்று சிறப்புமிக்க 'பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில்' (Brigade Parade Ground) நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில், காலை 10 மணி முதல் பதவியேற்பு விழா நடைபெறும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய பாஜக அரசு மே 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கும் என்று அவர் கூறினார். இந்த பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த ஏற்பாடுகளை நேரடியாக மேற்பார்வையிட்டு வருகின்றனர். இந்த பதவியேற்பு விழாவில், ஏராளமான கட்சித் தொண்டர்களும் மூத்த தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது வெள்ளிக்கிழமை மாலை புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கியக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதன்போதே, பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன் மூலம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நிறைவடைந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.