பாஜவுக்கு தேர்தல் ஜூரம் பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வருகை: சிதம்பரம், திருவண்ணாமலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
சென்னை: தமிழகத்துக்கு அடுத்த மாதம் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். தேர்தல் பணிகளில் பாஜ தீவிரமாக இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்து கூட்டணியை அறிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். தற்போது மீண்டும் இரண்டு நாள் பயணமாக மோடி தமிழகம் வருவதாக பாஜவினர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 26ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருகிறார்.
அங்கு மான்கிபாத் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 27ம் தேதி திருவண்ணாமலை சென்று சாதுக்களை சந்திக்கிறார். அப்போது அரசு நிலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசும், பாஜவினரும் செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சியாவது தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கும் பாஜவுக்கும் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் தமிழகத்திற்கு மோடி வந்தாலும், அதைத் தொடர்ந்தும் தேர்தல் முடியும் வரை மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு அடிக்கடி வருவார்கள் என்று கூறப்படுகிறது.


