3 நியமன எம்எல்ஏக்களை தன்னிச்சையாக நியமிப்பதோடு அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்டு புதுச்சேரி முதல்வருக்கு பாஜ நெருக்கடி: தாமதமாகும் பதவியேற்பு விழா
புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தன்னிச்சையாக 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்க முடிவு செய்துள்ள பாஜ, சட்டசபையில் தனது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்டு ரங்கசாமிக்கு நெருக்கடி ெகாடுத்து வருகிறது. இதனால் பதவியேற்பு விழா தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றிபெற்ற என்ஆர் காங்கிரஸ், மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இதுதொடர்பாக தனது கட்சியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் வென்ற பாஜவுக்கு 2 அமைச்சர், ஒரு சபாநாயகர் பதவியை முதல்வர் ரங்கசாமி வழங்கியிருந்த நிலையில், தற்போது 4 எண்ணிக்கையை மட்டுமே வைத்துள்ள பாஜவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்தமுறை அக்கட்சிக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே வழங்க வேண்டுமென நிர்வாகிகள், நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் பாஜ கை காட்டும் நபருக்கு அமைச்சர் பதவியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தகவல் கசிகிறது. இதனிடையே டெல்லி பாஜ தலைமை உத்தரவுக்கிணங்க பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்தார். பாஜவில் தேர்வான நபர்களுடன் ஆலோசனை நடத்தி் சட்டசபை தலைவராக நமச்சிவாயத்தை தேர்வு செய்தனர். இக்கூட்டத்தில் பாஜவின் 4 எம்எல்ஏக்களுடன், நெடுங்காடு சுயேட்சை விக்னேஸ்வரன், எல்ஜேகே தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரும் பங்கேற்றனர். இதன்மூலம் பாஜ தன்னுடைய பலத்தை 6 ஆக அதிகரித்தது.
இதுதவிர கடந்தமுறை போலவே, ஒன்றிய அரசின் அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தி 3 நியமன எம்எல்ஏக்களை உடனே நியமிக்கவும் பாஜ தயாராகி வருவதாக தெரிகிறது. பாஜவில் ேபாட்டியிட்டு தோல்வியடைந்த நபர் உள்ளிட்ட 3 பேரை இப்பதவிக்கு நியமித்து அதற்கான உத்தரவை விரைவில் டெல்லி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட உள்ளதையும் சுட்டிக்காட்டி, 2 அமைச்சர்கள், சபாநாயகர் பதவியை கூடுதலாக கேட்டும் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக பாஜ வட்டாரத்தில் விசாரித்தபோது, தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.
அவர் நேரம் ஒதுக்கி கொடுத்ததும், பாஜ தனது ஆதரவு கடிதத்தை கொடுத்து மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பாகவும், அமைச்சரவையில் பங்கேற்பது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றனர். அதேவேளையில் என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்களோ, கடந்தமுறை போன்று பாஜவுக்கு அமைச்சரவையில் கூடுதல் இடம் கொடுக்க வாய்ப்பில்ைல. சுயேட்சை, லஜக, நியமன எம்எல்ஏக்களை வைத்து அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது. இதில் ரங்கசாமி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அக்கட்சி, பாஜவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தாமதம் செய்து வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே வருகிற 16ம்தேதி அமாவாசை. அதன்பிறகே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளார். முதலில் அவர் மட்டும் பதவி ஏற்றுகொண்ட பிறகு, யார், யாருக்கு அமைச்சர் பதவி தருவது என்பதை அப்பா பைத்தியம் சுவாமி மற்றும் அழுக்குசாமி ஆசியோடு இறுதி செய்வார் என தகவல் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக, முதல்வர் பதவியேற்பு விழா 2 வாரத்துக்கு தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்தமுறையும் இதுபோன்று பல்வேறு நெருக்கடி பாஜ கொடுத்த நிலையில், அவற்றை சமாளித்து 5 ஆண்டுகால ஆட்சியை ரங்கசாமி நிறைவு செய்த நிலையில் தற்போதும் அதை சாதூர்யமாக சமாளிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.



