தான் ஆளாத மாநில மக்களின் உழைப்பை சுரண்டும் பாஜ: செல்வபெருந்தகை சூடு
திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்கள் கொடுக்கும் நிதியை, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்து விடுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பாஜ ஆளாத மாநில மக்களின் உழைப்பை சுரண்டுகிறது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது போல், ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வைப்போம். போலி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு உகந்த மண் தமிழ் மண் அல்ல.
தமிழ்நாட்டை ஒரு போதும் மக்கள் தலைகுனிய விட மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கும், ஒன்றிய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் தமிழ்நாட்டை பட்ஜெட்டில் நிராகரித்துள்ளனர். இந்தியாவில் அரசமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என காந்தி கூறியதால், ஆர்எஸ்எஸ்காரர்கள் அவரை கொலை செய்தனர் என்றார். முன்னதாக செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. நாங்கள் சுமூகமாக தான் இருக்கிறோம். காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமை முடிவெடுக்கும்’’ என்றார்.