Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரியாணி போட்டும் தேர்தல் அறிக்கைக்கு கருத்து சொல்ல யாரும் வராததால் அதிர்ச்சியடைந்த இலைக்கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கட்சி மாஜி மீசைக்கார அமைச்சரும், முக்கிய நிர்வாகியும் செய்யும் தகிடுதத்தம் சிட்டிங் எம்எல்ஏவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சி மாவட்ட முக்கிய நிர்வாகிக்கும், முன்னாள் மீசைக்கார அமைச்சருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தாம்.. தலைநகர் தொகுதியில் இலைக்கட்சி மாவட்ட முக்கிய நிர்வாகி முருகர் பெயரை கொண்டவர் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார்.

இவர், ஏற்கனவே இதே தொகுதியின் மீசைக்கார மாஜி அமைச்சருக்கு எதிராக உள்ளடி பார்த்து சீட்டை கைப்பற்றினாராம்... அதே பாணியில் தற்போதைய சிட்டிங்கிற்கு எதிராக உள்ளடி வேலைகளை மீசைக்கார மாஜி மட்டுமின்றி, பேரவை பொறுப்பில் இருக்கும் செல்வத்துக்கு முன் தமிழை கொண்டவர் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.. சிட்டிங் தும்மினால் கூட சேலத்துக்காரருக்கு தகவல் போய் விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதனால், சிட்டிங் திக்குமுக்காடி வருகிறாராம்..

இந்த சூட்டோடு சூடாக சேலத்துக்காரர் இந்த முறை எனக்கு தான் வாய்ப்பு தருவார் என பேரவைக்காரர் தொகுதி முழுவதும் தகவலை கசிய விட்டு வருகிறாராம்.. இதனால், சிட்டிங் எங்கே தனக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற ஏக்க மனநிலைக்கு சென்றுவிட்டாராம்.. தனது அடிபொடிகளை அழைத்து இருவருக்கும் எதிரான தகவல்களை திரட்டி வருமாறு உத்தரவிட்டுள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பிரியாணி போட்டும் தேர்தல் அறிக்கைக்கு கருத்து சொல்ல மக்கள் வராததால் அதிர்ச்சியடைந்த அதிமுக குழுவினர் மண்டபத்தில் இருந்து பறந்துட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி சார்பாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, ஆர்.பி.உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கொண்ட குழு முதலில் வெயிலூருக்கு வந்து இருந்தாங்க..

இங்கு வெயிலூர், மிஸ்டர்பத்தூர், குயின்பேட்டை, கிரிவல மாவட்டங்கள்ல இருந்து 21 சட்டமன்றத்தை சேர்ந்த பொதுமக்கள், வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த கூட்டமைப்பினரிடம் கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இலைக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தார்களாம்.. ஆனால் இந்த கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொள்ள முக்கிய சங்க நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லையாம்.. குறிப்பாக கட்சி நிர்வாகிங்களே இந்த கூட்டத்திற்கு வரவில்லையாம்..

அதுமட்டுமின்றி வெயிலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில தொழில் நிர்வாகிகள் மட்டுமே பெயரளவுக்கு வந்து இருந்தார்களாம்.. ஆனால் மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை, கிரிவல மாவட்டங்களில் இருந்து ஒற்றை எண்ணிக்கையில் மட்டுமே வந்து இருந்தனர். இதனால் கூட்டம் நடந்த அரங்கேமே காற்று வாங்கியது. இதை பார்த்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தவர்கள் கடும் அதிருப்தி அடைஞ்சாங்களாம்..

இலைக்கட்சி தேர்தல் அறிக்கைக்கு கருத்து சொல்வதை பொதுமக்கள், தொழில் அமைப்பினர்,a அரசு ஊழியர்கள் சங்கத்தினர் என பலரும் புறக்கணித்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்திருக்குதாம்.. நிறைய கூட்டம் வரும்னு எதிர்பார்த்து பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம்.. ஆனால், கூட்டமே இல்லாதால் பிரியாணி சாப்பிட கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டதோட சாப்பிட்டவங்களே ஓரிரு பிரியாணி பொட்டலங்கள் என அள்ளிச்சென்றார்களாம்..

கூட்டம் தொடங்கி ஒரு ஒன்றரை மணி நேரத்திற்குள்ள முடித்துக் கொண்டு நிர்வாகிகள் பறந்துவிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல கோடி மதிப்பு அரசு நிலத்திற்கு பட்டா வழங்க, ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டிடம் பல கோடி ரூபாய் பெற்று வருவாய்துறை அதிகாரிகள் ஏமாற்றிட்டாங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மோட்டார் ஷோரூம் அருகே மோர்னப்பள்ளி கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட அரசு புறம்போக்கு (கல்லாங்குத்து) நிலம் இருக்காம்..

இந்த நிலத்திற்கு போலி ஆவணங்களை பலர் தயார் செய்து, அதன் மூலம் பட்டா பெற முயற்சி செய்றாங்களாம்.. குறிப்பிட்ட இந்த நிலத்திற்கு பட்டா பெற்றுத் தருவதா கூறி, ஓசூர் தாசில்தார் உதவியுடன், டிஆர்ஓ தரப்பில் ஒரு ரியல் எஸ்டேட் முகவரிடம் பேச்சுவார்த்தை நடந்துச்சாம்.. அந்த முகவரிடம் இருந்து பல கோடி பணம் கைமாறிடுச்சாம்.. ஆனால், பணம் கொடுத்து நீண்ட நாளாகியும் அந்த நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லையாம்.. இதனால சம்பந்தப்பட்ட முகவர், டிஆர்ஓவை நேரில் சந்தித்து கேட்டாராம்..

ஆனால், அவர் முறையான பதில் அளிக்கவில்லையாம்.. பணத்தை திரும்ப கேட்டாலும் அதிகாரிகளிடமிருந்து பிடிகொடுக்காத பதிலே வந்ததாம்.. பணத்தையும் தராமல், பட்டாவும் வழங்காமல் துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி அதிகாரிகளுக்கு புகாரை தட்டியுள்ளாராம்.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை உயர்ந்த அரசு நிலங்களை கண்டறிந்து, அவற்றுக்கு பட்டா பெற்று தருவதாகக் கூறி பெரும் தொகையைச் சுருட்டுவதையே சில அதிகாரிகள் வாடிக்கையாக வச்சிருக்காங்களாம்..

குறிப்பாக, மோர்னப்பள்ளி நிலத்திற்குதான் பலர் போலி ஆவணங்களுடன் பட்டா பெற முயற்சிப்பதும், அதற்கு அதிகாரிங்க உடந்தையாக இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்காம்.. இதனால், பல கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாம்.. ஓசூரில் நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற கட்டிடத்தை கட்டாமல் பொதுமக்கள் வசிக்கும் 9 வீடுகளை இடித்து விட்டு அங்குள்ள நிலத்தை நீதிமன்றத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்காம்..

இதற்கு முக்கிய காரணம், அந்த பகுதியில்தான் அரசு அதிகாரிகள் பலரும் நிலத்தை வாங்கி குவித்துள்ளார்களாம்.. இதனால்தான் அவசர அவசரமாக மக்களை வெளியேற்றிவிட்டு இடத்தை அதிகாரிகள் கைப்பற்றும் வேலையில் இறங்கியிருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.