வெற்றிக்கதை சொல்லும் உணவகம்..!
சென்னையில் தற்போது அண்ணா நகருக்கு அடுத்தபடியாக வேளச்சேரியிலும் உணவகங்கள் நிறைந்துவிட்டன. அரேபியன், சைனீஸ், இந்தியன் ஸ்டைல் உணவுகள் என பலவும் கிடைக்கும் இடமாக வேளச்சேரி இருக்கிறது. ஒவ்வொரு உணவகத்திற்கென்று யுனிக் டிஸ்ஸும், யுனிக் டேஸ்ட்டும் இருக்கும். இதில் மேலைநாட்டு உணவுகளை பலர் நம்ம ஊர் டேஸ்டில் கொடுக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் தனிச்சுவையில் அனைத்து வயது மக்களும் விரும்பி சாப்பிடும் வகையில் உணவுகளை தயார் செய்து வழங்கிவரும் “அஞ்சனா பிரியாணி” உணவகத்தின் உரிமையாளர் மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்தான் எனக்கு சொந்த ஊரு. எட்டாவது வரை மட்டுமே படித்த நான் பிழைப்பு தேடி எனது சொந்த ஊரை விட்டு 18 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். சென்னையில் வேளச்சேரியில் இருந்துதான் எனது வாழ்க்கையை தொடங்கினேன்.
உழைப்பு மட்டும்தான் என்னிடம் இருந்த மூலதனம். இதை வைத்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று சென்னை வந்த நான் வேளச்சேரியில் இருக்கும் ஒரு மளிகைக் கடையில் பார்சல் கட்டும் தொழிலை செய்து வந்தேன். மளிகைக் கடையின் உரிமையாளர் ராம்குமார் எனக்கு மிகவும் துணையாக இருந்தார். அவர் மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கும் போதே அருகில் ஒரு உணவகத்தை தொடங்கினார். என் மேல் உழைப்பின் மேல் இருந்த நம்பிக்கையில் மளிகைக் கடையில் இருந்து உணவகத்திற்கு என்னை வேலைக்கு அமர்த்தினார். சிறிது காலம் உணவகத்தை நடத்தி வந்த அவர் இனிமேல் உணவகத்தை நீ நடத்து என்று என்னிடம் கூறினார். நீங்கள் கொடுக்கும் சம்பளம் மட்டும்தான் மற்றபடி பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் எப்படி உணவகத்தை வாங்கி நடத்துவது என்று கேட்டேன். அதற்கு அவர் உன்னிடம் பணம் கொடு என்று கேட்கவில்லை எனச் சொன்னார். ஏற்கனவே உணவகத்தில் அனைத்து வேலைகளையும் செய்த நான் உணவு தயாரிப்பது குறித்தும் கற்றுக் கொண்டேன். என்னை பொருத்தவரை எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரி கண் பார்க்கணும் கை செய்யணும் என்பதே என் எண்ணம். அப்படி பழகியதுதான் இந்த உணவு தயாரிப்பது.
வேளச்சேரியில் அண்ணாநகரில் கிடைப்பது போன்ற துரித உணவுகள் கிடைக்காது. அதை கருத்தி்கொண்டு பிரியாணி மட்டும் கொடுத்து வந்த நான் சைனீஸ் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் அரேபியன் ஸ்டைல் பார்பிக்யூ, க்ரில் சிக்கன் கொடுக்க துவங்கினேன். இது நான் எதிர்பார்த்ததை விட மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.வெளிநாட்டுத் துரித உணவுகள் அனைத்தையும் நம்ம ஸ்டைலில் கொடுத்தேன். அஞ்சனா உணவகம் தொடங்கி ஆறு வருடங்களுக்கு மேலானாலும், இன்றைக்கும் முதன்முதலில் வந்து சாப்பிட்டவர்கள் இந்த உணவகத்திற்கு வந்து செல்கின்றனர். மளிகைக்கடையில் வேலை செய்த அனுபவம் உணவகத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மளிகைப் பொருட்களை எப்படி பார்த்து வாங்குவது என்று தெளிவாக அறிந்து கொண்டேன். அதனால் இப்போதும் நானே சென்றுதான் உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன். சிக்கன், மட்டனை பொருத்த வரையில் அருகில் இருக்கும் கடை ஒன்றில்தான் வாங்குகிறேன்.
காரணம் அங்கு இறைச்சி சுத்தமாக இருக்கும். எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுவதென்றால் அது அஞ்சனா ஸ்பெஷல் சிக்கன், அஞ்சனா ஸ்பெஷல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ், ஹரியாலி சிக்கன், தங்கிடி கபாப், பட்டர் சிக்கன் மசாலா, பெப்பர் பார்பிக்யூ, புதினா நான், கார்லிக்நான் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதுதான் எங்களோட சிக்னேச்சர் டிஸ். எங்களது உணவகத்தில் பிரியாணி ரொம்ப ஃபேமஸ். அதேபோல நான் ரொட்டி ரொம்ப ஃபேமஸ். சைவ பிரியர்களுக்கென்று கோபி மஞ்சூரியன், மஸ்ரூம் கிரேவியும், பனீர் டிக்கா என்று கொடுக்கிறோம்.ரொட்டியோடு சேர்த்து இந்த மசாலாவை சாப்பிடும்போது அல்டிமேட்டாக இருக்கும். இது போக சிக்கனில் ஸ்பெஷலாக கிரில் சிக்கன், பார்பிக்யூ சிக்கன், பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வழங்கிவருகிறோம். தந்தூரி என்று பார்க்கும்போது தந்தூரி சிக்கன், ஹரியாலி கபாப், சிக்கன் டிக்கா, பனீர் டிக்கா, கோபி டிக்கா, மலாய் கபாப் கொடுத்துட்டு இருக்கிறோம். அதேபோல நூடுல்ஸில் சேஸ்வான் சிக்கன் நூடுல்ஸ், சேஸ்வான் பனீர் நூடுல்ஸ், சிக்கன் க்ரிஸ்பி நூடுல்ஸ், அமெரிக்கன் சாப்ஸி, சைனீஸ் சாப்ஸி, கடல் உணவுகளில் சில்லி ப்ரான், ப்ரான் மஞ்சூரியன், பெப்பர் ப்ரான், பிஸ் மஞ்சூரியன் என்று அனைத்தையும் எங்களது ஸ்டைலில் கொடுத்து வருகிறோம்.
உணவகத்தில் காலை 11 மணிக்கெல்லாம் பிரியாணி தயாராகிவிடும். பாசுமதி அரிசி பிரியாணி மட்டுமில்லாமல் வாரம் இருமுறை சீரகச் சம்பா பிரியாணியும் கொடுக்கிறோம். சீரகச் சம்பா பிரியாணியை பொருத்த வரையில் மதுரை ஸ்டைலில் கொடுப்பதால் நிறைய பேர் விரும்பி சாப்பிடுகின்றனர். சீரகச் சம்பா பிரியாணி தயார் செய்த மூன்று மணி நேரத்தில் பிரியாணி விற்றுத் தீர்ந்துவிடும். பிரியாணியில் சிக்கன், மட்டன் என்று இரண்டும் கொடுத்து வருகிறோம். நான் மற்றும் தந்தூரி தயாரிக்க கறிக்கட்டைகளைதான் பயன்படுத்துகிறோம். அப்போது அதன் ருசி தனியாகத் தெரியும். இதை நாம் கேஸ் அடுப்பில் வறுத்தால் கேஸ் மணம் தான் வருமே தவிர, அந்த டிஸ்ஸின் மணம் வராது. அதனால் நல்ல தகதகவென்று இருக்கும் தந்தூரி அடுப்பில் நன்கு அடித்து துவைத்த மைதா மாவை நேரடியாக வேக வைத்து எடுப்போம். எங்க பிரியாணிக்கென்று தனிச் சுவை இருக்கும். அதுக்கு காரணம் நாங்க தேர்ந்தெடுக்குற ஆடு, கோழி தான். இளம் ஆடாகவும், இளம் கோழியாகவும் வாங்கி வந்துதான் சமைக்கிறோம். அதுபோல பிரியாணி ரெடி பண்ண தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு. வெங்காயம் எந்த அளவுக்கு வேகணும், இஞ்சி பூண்டு எவ்வளவு போடணும், மசாலாவோட அளவு என்னன்னு ஒவ்வொரு செய்முறையிலும் தனிக் கவனம் செலுத்துகிறோம்.
உணவின் டேஸ்ட்டுக்காவும், வாடிக்கையாளர்களின் உடல்நிலையை கவனத்தில் வைத்தும் உணவகத்தை நடத்துவதால் தொடர் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கியுள்ளனர். சவர்மாவில் வெஜ் சவர்மா, சிக்கன் சவர்மா, மெக்சிகன் சவர்மா ரோல் என்று கொடுத்துட்டு இருக்கோம். உணவகத்திற்கு வந்து சாப்பிடுபவர்கள் உணவின் ருசிக்காக காத்திருந்து சாப்பிடுகின்றனர். வாடிக்கையாளர்களை காத்திருக்க வைக்கக் கூடாது என்பதற்காக உணவகத்தை விரிவுபடுத்தும் வேலையில் தற்போது இறங்கி உள்ளேன். ஆன்லைன் மூலமாக பக்கெட் பிரியாணி அதிகமாக கொடுத்துட்டு இருக்கோம். ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குறது இந்த பக்கெட் பிரியாணிதான். அவங்களுக்காகவே யுனிக்கான முறையில பாக்ஸ் தயாரிச்சு அதுலையும் காம்போவா கொடுத்துட்டு இருக்கோம். ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 5 லிருந்து 7 பேர் வரை சாப்பிடலாம். இந்த பக்கெட் பிரியாணிய ரூ.900 க்கு கொடுத்துட்டு இருக்கோம். அதேபோல் 10 லிருந்து 12 பேர் சாப்பிடக்கூடிய பக்கெட் பிரியாணியை ரூ.1800க்கும் வழங்கி வருகிறோம். கார்பரேட் ஈவன்ட், பார்ட்டி ஆர்டர்ஸும் எடுத்துட்டு இருக்கோம். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என மகிழ்ச்சியோடு கூறி முடித்தார்.
- சுரேந்திரன் ராமமூர்த்தி.


