Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிறப்பு குடியுரிமை ரத்து திட்டம் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்த உத்தரவு பிப்.19 முதல் அமலுக்கு வரும் என்பதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அறுவை சிகிச்சை வழியாக குழந்தை பெற்றுக்கொண்டு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக முயற்சி செய்கிறார்கள். 7 மாத கர்ப்பிணிகள் கூட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பிப்.20ம் தேதி முதல் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார்,’டிரம்ப்பின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ எனக் கூறி அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார். இதன் மூலம் டிரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் தடை உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்’ என்று அவர் தெரிவித்தார்.

* 538 பேர் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற வந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில்,’ அமெரிக்க அதிகாரிகள் 538 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அவர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர்.

இதில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ட்ரென் டி அராகுவா கும்பலைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோத குற்றவாளிகள் இருந்தனர். அவர்களை கைது செய்த டிரம்ப் நிர்வாகம் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன’ என்று தெரிவித்தார்.

* உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் புதிய யோசனை

அதிபர் டிரம்ப் கூறுகையில்,’உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் போதும். ரஷ்யா உடனே போரை நிறுத்தி விடும். இந்த போரை நிறுத்த ரஷ்யா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதற்காக புடின் என்னைப் பார்க்க விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றார்.

* போர் எப்படி நிறுத்தப்படும்? டிரம்ப்புக்கு ரஷ்யா கேள்வி

எண்ணெய் விலை குறைவது உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்று டிரம்ப் கூறியதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,’ ரஷ்ய பாதுகாப்பு நலன்களை மேற்கு நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்ததால் உக்ரைன் போர் ஏற்பட்டது. இந்த போர் எண்ணெய் விலையை சார்ந்தது அல்ல. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பானது. டிரம்புடன் தொடர்பு கொண்டு பேச ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார்’ என்றார்.