Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

103வது பிறந்த நாள் கோலாகலம் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றினார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அன்பகத்தில் புதுப்பிக்கப்பட்ட 75 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழித்தோன்றலாக திமுக எனும் பேரியக்கத்தை சுமார் 50 ஆண்டு காலம் கட்டிக் காத்த கலைஞரின் 103வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8 மணி அளவில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காலை 8.15 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கலைஞரின் சிலைக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மு.க.ஸ்டாலின், கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் காலை 10 மணி அளவில், தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தில் 75 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.

மேலும் திராவிட இயக்கத்தின் தூண்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய மூவரின் சிலைகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும் புதுப்பிக்கப்பட்ட அன்பக அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளால் அன்பகம் வளாகம் முழுவதும் விழாக்ேகாலம் பூண்டிருந்தது. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் திரண்டு வந்திருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சிகளில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, பொன்முடி, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் படத்தை வைத்து, கட்சியினர் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகள் நடத்தியும் கோலாகலமாக கொண்டாடினர்.

அண்ணா அறிவாலத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த போது, அங்கு குழுமியிருந்த ஏராளமான திமுக மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினருக்கும் இனிப்பு பொட்டலங்களை வழங்கி வாழ்த்தினார்.

இதில், திமுக மாற்றுத் திறனாளிகள் அணியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம், அணி செயலாளர் தீபக் நாதன், அணி துணைச் செயலாளர்கள் க.எழிலன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் பா.சந்தானகிருஷ்ணன், மாநில பொருளாளர் க.இளங்கோவன், சென்னை மாவட்ட அமைப்பாளர் சங்க தர்மலிங்கம் மற்றும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.