Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா!

இந்திய பெண்களின் அழகை நினைத்தாலே முதலில் நினைவிற்கு வருவது நெற்றியில் ஒளிரும் பொட்டுதான். அதனால்தான் இந்திய ராணுவ யுத்தத்திலேயே ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ என்கிற பெயர் சூட்டப்பட்டு பெண்களால் திட்டமிடப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; ஆயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், ஆன்மிகம், அடையாளம் ஆகியவற்றை தன்னுள் கொண்ட ஒரு வழக்கம். இதன் தனித்துவ அழகு காரணமாகவே தற்போது இந்து அல்லாத மற்ற பெண்கள் பலரும் கூட நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். பண்டைய இந்திய மரபுகளில் நெற்றி நடுவில் உள்ள இடம் “ஆஜ்ஞா சக்ரா” அல்லது “மூன்றாவது கண்” என்று கருதப்படுகிறது. இதுவே ஞானம், கவனம், ஆன்மிக விழிப்பு ஆகியவற்றின் மையமாக பார்க்கப்படுகிறது. அந்த இடத்தில் குங்குமம் அல்லது சந்தனம் வைப்பது மனதை ஒருமுகப்படுத்தும் என்று பழங்கால சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான் கோயில்களில் அர்ச்சனை செய்தபின் குங்குமம் அல்லது சந்தனம் நெற்றியில் வைக்கப்படும் வழக்கம் உள்ளது.

பாரம்பரியமாக சிவப்பு நிற பொட்டு பெண்களின் திருமண நிலையை குறிக்கும் அடையாளமாகவும் இருந்தது. குறிப்பாக வட இந்தியாவில் திருமணமான பெண்கள் குங்குமம் மற்றும் சிவப்பு பொட்டு அணிவது குடும்ப வாழ்வின் அடையாளமாக கருதப்பட்டது. ஆனால் தென்னிந்தியாவில் அது அழகுக்கும் கலாச்சாரத்திற்குமான ஒரு பொதுவான அலங்காரமாகவும் பரவலாக இருக்கிறது. மேலும் முன்பு போல பொட்டு என்பது திருமணத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கப்படுவது குறைந்து ஃபேஷன் அடையாளமாகவும் காணும் மனநிலை வளர்ந்திருப்பது சிறப்பான ஒரு முன்னேற்றம். முன்பு குங்குமம் அல்லது கருப்புப் பொட்டாக மட்டுமே இருந்தது. இன்று ஸ்டிக்கர் பொட்டு, கல் பொட்டு, டிசைனர் பொட்டு, எனபல நிறங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கிறது. சால்வார், சேலை, லெஹங்கா போன்ற உடைகளுக்கேற்ப பெண்கள் பொட்டையும் தேர்வு செய்கிறார்கள்.

திரைப்படங்களும் ஃபேஷன் உலகமும் இதை மேலும் பிரபலப்படுத்தின. சில நடிகைகள் நீளமான பொட்டு, சிலர் சிறிய கற்களுடன் கூடிய பொட்டு போன்ற ஸ்டைல்களை பிரபலமாக்கினர். இன்று பொட்டு என்பது பாரம்பரியத்தையும் நவீன ஃபேஷனையும் இணைக்கும் ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த அலங்காரமாக மாறியுள்ளது.ஒரு சிறிய புள்ளியாகத் தோன்றினாலும், அந்த பொட்டில் பெண்ணின் அழகு, நம்பிக்கை, கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதனால் தான் “பொட்டு” என்பது ஒரு அலங்காரம் மட்டும் அல்ல; பெண்ணின் அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது.

பொட்டுகளின் (Bindi) முக்கிய வகைகள்

குங்குமப் பொட்டு

சிவப்பு குங்குமத்தை வைத்து இடப்படும் பாரம்பரிய பொட்டு. திருமணமான பெண்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். மேலும் நடு வகிடு துவங்கும் இடத்திலும் வைத்துக்கொள்வது திருமணமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

சந்தனப் பொட்டு

சந்தனப்பொடியை கலந்து இடப்படும் பொட்டு. இது குளிர்ச்சியையும் தரும்; கோயில் வழிபாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும். கேரளப் பெண்கள், ஆண்கள் இந்த சந்தனப் பொட்டு அதிகம் பயன்படுத்துவதுண்டு.

கருப்புப் பொட்டு

கருப்பு நிறத்தில் இடப்படும் பொட்டு. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கண்மை கொண்டு திருஷ்டி தவிர்க்க இடுவார்கள்.

ஸ்டிக்கர் பொட்டு(Sticker Bindi)

இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வகை. பல வடிவங்கள், நிறங்கள், கற்கள் (stones) உடன் கிடைக்கும்.

கல் பொட்டு -

டிசைனர் பொட்டு கற்கள், கிறிஸ்டல், முத்து போன்றவற்றால் செய்யப்பட்ட அலங்கார பொட்டு. பார்ட்டி அல்லது விழாக்களில் அதிகமாக பயன்படுத்தப்படும்.

நீளமான பொட்டு

நெற்றியில் நீளமாக வரையப்படும் அல்லது ஸ்டிக்கராக ஒட்டப்படும் பொட்டு. தென்னிந்திய பாரம்பரிய உடைகளுடன் பொதுவாக பயன்படுத்தப்படும்.

வடிவமைப்பு பொட்டு (Designer Shapes)

இதயம், இலை, முக்கோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் வரும் ஃபேஷன் பொட்டுகள்.முகத்தின் அமைப்பை கருத்தில் கொண்டு பொட்டு தேர்வு செய்தால் மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும். வட்டமான முகம் கொண்டவர்களுக்கு நீளமான அல்லது ஓவல் வடிவ பொட்டு மிகவும் பொருத்தமாக இருக்கும். வட்ட முகத்தில் சிறிய நீளமான பொட்டு வைத்தால் முகம் கொஞ்சம் நீளமாகவும் சமநிலையாகவும் தோன்றும். மிகப் பெரிய வட்ட பொட்டுகளை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அது முகத்தின் வட்டத்தன்மையை மேலும் அதிகமாக காட்டக்கூடும். வயதையும் கூட்டிக் காட்டும். நீளமான முகம் கொண்டவர்களுக்கு நடுத்தர அளவிலான வட்ட பொட்டு அழகாக இருக்கும். இது முகத்தின் நீளத்தை

சமநிலைப்படுத்த உதவும். மிகவும் நீளமான பொட்டுகளை விட சற்று பெரிய வட்ட பொட்டு வைத்தால் முகம் சற்றே குறுகியதாகவும் அழகாகவும் தெரியும்.

ஓவல் முகம் கொண்டவர்கள் எந்த வடிவ பொட்டையும் சுலபமாக அணியக்கூடியவர்கள். வட்டம், ஓவல், நீளமான பொட்டு என எந்த வடிவமும் இந்த முக அமைப்புக்கு பொருந்தும். இருப்பினும் நடுத்தர அளவிலான வட்ட பொட்டு அல்லது சின்ன நீளமான பொட்டு மிகவும் அழகான தோற்றம் கொடுக்கும். சதுர முகம் கொண்டவர்களுக்கு மென்மையான வட்ட அல்லது ஓவல் பொட்டுகள் சிறந்த தேர்வாக இருக்கும். சதுர முகத்தில் கூர்மையான கோணங்கள் இருப்பதால் வட்ட வடிவ பொட்டு முகத்திற்கு மென்மையான தோற்றத்தை அளிக்கும்.இதயம் வடிவ முகம் கொண்டவர்களுக்கு சிறிய அல்லது நடுத்தர அளவிலான வட்ட பொட்டுகள் பொருத்தமாக இருக்கும். மிகவும் பெரிய பொட்டுகளை விட சின்ன மற்றும் எளிய வடிவங்கள் முகத்தின் சமநிலையை கூட்டும்.

- எஸ். விஜயலட்சுமி