Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொலம்பியாவின் சமூக வலைதள பிரபலம்; லாரி சக்கரத்தில் சிக்கி பெண் ‘பைக் ரைடர்’ பலி: மரணத்தை கணித்த கடைசி பதிவு வைரல்

பொகோட்டா: கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள நட்சத்திரம் கரன் சோபியா குய்ரோஸ் ராமிரெசை (25), ‘பைக்கர் கேர்ள்’ என்று செல்லமாக அழைப்பார்கள். இவர், தனது சாகச பயணங்கள் மற்றும் பைக் ஓட்டும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடாபிளாங்கா பகுதியில் நடந்த கோர விபத்தில் இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் பைக் ரைடர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த அன்று நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுக்கு இடையே தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல கரன் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் சென்ற காரின் மீது பைக் உரசியதில், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அந்த நேரம் பார்த்து பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘நான் இன்று கண்ணாடி அணியாமல் பைக்கை ஓட்டுகிறேன்; விபத்து ஏதும் நடக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். விளையாட்டாக அவர் வெளியிட்ட அந்த வார்த்தைகளே நிஜமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ‘மரணத்தை முன்கூட்டியே கணித்துவிட்டாரா?’ என உருக்கமாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே விபத்து குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.