கடலூர்: பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதி தாய், தந்தை, மகன் பலியாகினர். கடலூர் முதுநகர் அருகே கொடிகால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி(65). இவரது மனைவி ராமாயி(62). இவர்களது மகன் ராஜேஷ்குமார்(30). பண்ருட்டி அருகே புலவனூரில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மூவரும் நேற்று மதியம் ஒரே பைக்கில் சென்றனர். பைக்கை ராஜேஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை கோண்டூர் அருகே சென்றபோது, எதிரே வந்த ஏடிஎம் வாகனம் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார், பக்கிரிசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமாயி படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
* லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் சாவு
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்த கோடந்தூர். முதலிகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் எம்.சாண்ட் மணல் லோடு ஏற்றிக்கொணடு டிப்பர் லாரி கரூர் புறப்பட்டது. லாரியை கரூர் வெங்கமேட்டை சேர்ந்த சந்தனகுமார்(41) ஓட்டினார்.
மணல் லோடு மீது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிக்கந்தர்கேட்டா(21), அஜய்பங்கரா(30), பல்ஜெம்ஸ்பர்வா(30), பீகாரை சேர்ந்த வித்யநாந்பிரபாகர்(48) ஆகியோர் உட்கார்ந்து சென்றனர். குவாரியில் இருந்து 1 கிமீ தொலைவில் ஒரு வளைவில் சென்றபோது திடீரென சாலையோரத்தில் லாரி கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்து கீழே விழுந்த சிக்கந்தர் கேட்டா, அஜய்பங்கரா, வித்யநாந்பிரபாகர் ஆகிய 3 பேர் எம்.சாண்ட் மணலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
