Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக்குகள் நேருக்கு நேர்மோதிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை: சென்னை சென்ட்ரல் அருகே பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி படுகொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். காதலியை பார்த்துவிட்டு வந்ததால், காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை எம்சி சாலையை சேர்ந்தவர் வசந்தகுமார் (21). இவர், நேற்று இரவு சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த பைக்கும், இவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திர மடைந்த மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தகுமாரின் கழுத்தில் சரமாரி குத்தியுள்ளனர். தடுத்தபோது கையில் குத்திவிட்டு தப்பினர். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வசந்தகுமார் உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பூக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பூக்கடை உதவி ஆணையர் வீரக்குமார் உத்தரவின்பேரில், பூக்கடை காவல் ஆய்வாளர் பூபதி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வசந்தகுமாருக்கு காதலி இருப்பதும், சேப்பாக்கத்தில் உள்ள அவரை பார்த்துவிட்டு இரவு 11.30 மணி அளவில் வீட்டிற்கு சென்ட்ரல் வழியாக வால்டாக்ஸ் சாலைக்கு வந்தபோது சம்பவம் நடந்ததும் தெரிய வந்தது.

மேலும் காதலியை பார்த்துவிட்டு வந்தபோது கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே, காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.