Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள வெள்ள நீரில் வந்திருக்கும் புதுவகையான மீன்களை யாரும் உண்ண வேண்டாம்: பீகார் அரசு எச்சரிக்கை

பாட்னா: நேபாள இமயமலை பகுதியில் உற்பத்தியாகும் போட்டேகோஷி ஆறு பீகாரில் கங்கையுடன் இணைகிறது. இதே போல, நேபாளத்தில் நாராயணி என அழைக்கப்படும் ஆறு பீகாரில் கண்டகி என்ற பெயருடன் கங்கையில் கலக்கிறது. இந்த ஆறுகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பீகார் ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து வரும் வெள்ள நீருடன் அடையாளம் தெரியாத மீன் இனங்கள் பீகாரின் சில பகுதிகளுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய மீன்களை உண்ட சிலருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பீகார் பால்வளம், கால்நடை வளங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் நந்த் கிஷோர் ராம் அளித்த பேட்டியில், ‘‘கண்டகி போன்ற ஆறுகள் வழியாக நேபாளத்தில் இருந்து அடித்து வரப்படும் மீன்கள் பார்ப்பதற்கு வழக்கமான மீன்களிலிருந்து மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளன. இந்த மீன்கள் வயிற்றுவலி, வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இவற்றை உண்பது நோய்தொற்றுக்கு வழிவகுக்கலாம். இவற்றை உண்ணாமல் இருப்பது நல்லது. மீனவர்கள் இத்தகைய மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய வேண்டாம்’’ என்றார்.

பீகார் அரசு வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘வெள்ளத்தின் போது குளங்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேறும் மீன்கள் பல பகுதிகளுக்கு பரவக்கூடும். அவை சாக்கடைகள், இறந்த விலங்குகள் மற்றும் அழுகும் பொருட்களுடன் நீண்ட நேரம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை ஆகியவற்றால் மாசுபடும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த மீன்களை உண்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது’ என கூறப்பட்டுள்ளது. ‘‘சுற்றுச்சூழல் நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பி, இயற்கையான மாசுக்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தாக்கம் குறையும் வரை, வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களை உண்ண வேண்டாம்.

மீன் சாப்பிட்ட பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் அல்லது பிற அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையம் அல்லது மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இத்தகைய மீன்கள் தென்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர்.