பீகார் தேர்தல் முடிந்த கையோடு காங்கிரசில் இருந்து விலகிய மாஜி அமைச்சர்: உட்கட்சி பூசலால் திடீர் முடிவு
பாட்னா: பீகார் மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலால், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஷகீல் அகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநில காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த சில காலமாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உட்கட்சிப் பூசல் பல நேரங்களில் வெளிப்படையாக வெடித்த நிலையில், கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ஷகீல் அகமது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இந்தச் சூழலில், பீகார் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அவர் தனது ராஜினாமா முடிவை அறிவித்து கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த திடீர் விலகல், பீகார் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்த உடனேயே, ஷகீல் அகமது தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்தார். கட்சியின் தேர்தல் வாய்ப்புகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, வாக்குப்பதிவு முடியும் வரை காத்திருந்து தனது விலகல் முடிவை அறிவித்ததாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பீகாரில் தற்போது அதிகாரத்தில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே தனது ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறியுள்ள அவர், காங்கிரசின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், காங்கிரஸ் சித்தாந்தங்களின் நலம் விரும்பியாகவும், ஆதரவாளராகவும் தொடர்ந்து நீடிப்பேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.