பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சந்தேகம் தேர்தல் ஆணையம் இணைத்த புதிய சாப்ட்வேரால் என்டிஏ வெற்றி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
பணகுடி: நெல்லை மாவட்டம் பணகுடி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 176 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘பீகார் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் தேர்தல் ஆணையாளர் ஞானேஸ்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் (SIR) புதிய சாப்ட்வேர் தேர்தல் கமிஷனால் இணைக்கபட்டதால் அந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவில் சந்தேகம் உள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். 6 சதவீத அளவுக்கு சாப்ட்வேர் இணைக்கப்பட்டதன் மூலம் வாக்களித்துள்ளதாக தெரிகிறது.
இதில் சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னை நிரபராதி என உறுதி செய்து நிரூபிக்க வேண்டும். அதனை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தில்லு முல்லு தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை. மீண்டும் இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு ஆட்சி மலரும்’ என்றார்.