நெல்லை: ‘பீகாரில் பாஜ பெற்ற வெற்றியை வைத்து தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களிலும் அதே வெற்றி இருக்கும் என்று உறுதியாக சொல்லி விட முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் மக்கள் பாஜவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, தமிழகத்தில் வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும். தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள். தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை தனிப்பட்ட அமைப்புகள் ஆகும். தேர்தலில் ஜெயித்தால் தேர்தல் ஆணையம் சரியாக உள்ளது. தோற்றால் தவறாக உள்ளது என கூறுவது சந்தர்ப்பவாத அரசியல்.
தேர்தல் ஆணையம் பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. டெல்லியில் குண்டுவெடிப்பையும், தேர்தலையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறு. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை வைத்து தமிழகம் உள்ளிட்ட வரவுள்ள 5 மாநில தேர்தலிலும் அதே நிலை இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ‘கேட்டதை செய்து தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’
‘நெல்லை தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் ஆர்டர் போட்டதாக கூறுகிறார்கள். எனக்கும், தமிழக முதல்வருக்கும் தனிப்பட்ட நட்பு உள்ளது. நான் நெல்லை தொகுதிக்காக கேட்ட கல்லூரி, பாலங்கள் போன்றவற்றை முதல்வர் செய்து தந்துள்ளார். இருந்தாலும், தேர்தலில் தனது கட்சி ஜெயிக்க வேண்டும் என்று அவர் நினைப்பது இயற்கைதான், அதில் தவறு இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
